வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

DIN | Published: 12th September 2018 02:32 AM


சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது தொடர்பாக, சிபிஐ தரப்பு நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், தமிழக அரசு சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு கோரியுள்ளதாக தெரிவித்தார்.
நீதிபதிகள் கேள்வி: அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சீனிவாசன், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சிபிஐ இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசீலனையில் இருந்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவேளை இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மறுப்பு தெரிவித்தால் என்ன செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
கூடுதல் தலைமை வழக்குரைஞர் விளக்கம்: இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மறுப்புத் தெரிவிக்கவில்லை. வழக்குத் தொடர்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தங்களின் நிலைப்பாடு குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

More from the section

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
கஜா புயல் கோரத்தாண்டவத்தால் போர்க்கால நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு!
கஜா கோராத்தாண்டவத்தால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிப்பு