வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

நாட்டின் பெருமைகளை இளைஞர்களிடம் நினைவூட்டுவதே விவேகானந்தரின் குறிக்கோள்'

DIN | Published: 12th September 2018 02:41 AM
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி குணஸ்ரீக்கு பரிசு வழங்குகிறார் நடிகர் விவேக். 


மறந்துபோயிருக்கும் நாட்டின் பெருமைகளை, திறனை இளைஞர்களிடம் நினைவூட்டவேண்டும் என்பதே சுவாமி விவேகானந்தரின் குறிக்கோளாக இருந்தது என பொற்றாமரை தமிழ் இலக்கிய அமைப்பின் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் கூறினார்.
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125-ஆம் ஆண்டு விழா சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் 
இல.கணேசன் பேசியது:
எல்லா விதமான வளங்களையும் பெற்று செல்வச் செழிப்போடு இருந்து, தங்களுடைய திறமைகளை மறந்திருந்தனர் இந்தியர்கள். அப்போது செழிப்பின் உச்சியில் அமெரிக்கா இருந்தது. அந்த நேரத்தில், இந்திய இளைஞர்களை மீண்டும் எழுச்சிபெறச் செய்ய, அங்கு சென்று உரையாற்றவேண்டும் என்பதற்காகவே பல்வேறு துன்பங்களுக்கு இடையே சிகாகோ சென்று விவேகானந்தர் உரை நிகழ்த்தினார்.
உலகின் மிகவும் தொன்மையான நாட்டின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன் என்று கூறித்தான் தனது பேச்சை விவேகானந்தர் ஆரம்பித்தார். அனைத்து மதங்களும் சமமானதே. எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அவை அனைத்தும் இறைவனைச் சென்றடையும் வழியைத்தான் கூறுகின்றன. எனவே, மதமாற்றம் ஏற்புடையதல்ல என்ற கருத்தை அங்கு அவர் பதிவு செய்தார் என்றார் அவர் பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசுகையில், சுவாமி விவேகானந்தரின் எழுத்துகளைப் படிக்கும் அனைவருக்கும் இரண்டு விஷயங்கள் முன்நிற்கும். ஒன்று தேச பக்தி. மற்றொன்று தெய்வ பக்தி. இன்று நாம் விவேகானந்தரை வழிபடுகிறோம், தெய்வமாகப் பார்க்கிறோம். அவர் கட்டாயம் வழிபட வேண்டியவர்தான். ஆனால், வழிபட்டால் மட்டும் போதாது, அவரைப் பின்பற்றி அவர் வழி நடக்கவேண்டும்' என்றார்.
முன்னதாக தொழிலதிபர் நல்லி குப்புசாமி வரவேற்புரையாற்றினார். மிஷன் செயலர் சுவாமி சத்யஞானானந்தர், பத்திரிகையாளர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், நடிகர் விவேக், கவிஞர் ரமணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

 

More from the section

கோவை குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 
மழை காரணமாக டாப்சிலிப்பில் யானை சவாரி நிறுத்தம்
கஜா புயல் தொடர்பாக முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
கஜா புயலில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கை