வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

பச்சை மரகதம்மாள் சிலை விவகாரம்: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நோட்டீஸ்

DIN | Published: 12th September 2018 01:41 AM


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகதம்மாள் சிலை மாயமான விவகாரம் தொடர்பான வழக்கில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக, எம்.ஆனந்த் மோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம், திருகோகர்ணத்தில் ஹகோகரணேஸ்வரர் பிரஹதாம்பாள் திருக்கோயில் உள்ளது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் பச்சை மரகத கற்களாலான 3 அடி உயரம் கொண்ட ஸ்ரீ பிரஹதாம்பாள் சிலையை இந்த கோயிலில் வைத்தார்.
பின்னர், புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ஸ்ரீ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இந்த சிலையை எடுத்துவிட்டு, கிரானைட் கற்களாலான மாற்றுச்சிலையை வைத்துவிட்டார். இந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட பச்சை மரகத சிலையை திருச்சியில் உள்ள தொண்டைமான் அரசுகளுக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையின் ஒரு இடத்தில் புதைத்துவிட்டனர்.
இந்த நிலையில், விலை மதிப்பில்லாத அந்த சிலை தோண்டி எடுக்கப்பட்டுவிட்டது. அந்த சிலை புதைக்கப்பட்ட இடம் தற்போது கார்த்திக் தொண்டைமானுக்குச் சொந்தமாக உள்ளது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் கடந்த 2013 -ஆம் ஆண்டு இரண்டு முறையும், கடந்த 2018 -ஆம் ஆண்டு ஜூன் மாதமும் புகார் அளித்தேன்.
அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து, விலை மதிப்பற்ற பச்சை மரகத கல்லால் ஆன சுவாமி சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வரும் செப்டம்பர் 20 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

More from the section

வேதாரண்யம்-நாகை இடையே கரையைக் கடந்தது கஜா புயல்
6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடி
அரசின் சார்பில் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம்
பட்டயக்கணக்காளர் தேர்வுக்கான பயிற்சி தொடக்கம்