வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

பரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு: ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது

DIN | Published: 12th September 2018 02:30 AM


சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீட்டை ரயில்வே தீர்ப்பாய தலைவர் கண்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கடந்த ஜூலை மாதம் 24 -ஆம் தேதி, சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயிலில், படியில் தொங்கியபடி பயணம் செய்த, 5 பயணிகள் பரங்கிமலை ரயில் நிலைய நடைமேடை சுவர் மோதி இறந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விபத்தில் இறந்த ஐந்து பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 8 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையொட்டி இழப்பீடு வழங்க, தெற்கு ரயில்வேயால் உரிய தொகை தீர்ப்பாயத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உரிய முறையில் விண்ணப்பம் செய்து இழப்பீடு பெறலாம் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.
அதன்படி, வரைமுறைகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க தீர்ப்பாய நீதிபதி கண்ணன் தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார்.
அவர், பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்த நவீன்குமார், சிவகுமார், பாரத், வேல்முருகன், ஸ்ரீவர்சன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ரூ. 8 லட்சம் இழப்பீடாக வங்கியில் இருந்து பெறுவதற்குரிய ஆணையை வழங்கினார்.
இதேபோல் பலத்த காயமடைந்த விஜயகுமாருக்கு ரூ.3.2 லட்சம் , விக்னேஷுக்கு ரூ. 2 லட்சம், முகமது யாசர், நரேஷ் குமார் ஆகியோருக்கு தலா ரூ. 1.24 லட்சம் இழப்பீடாக வங்கியில் இருந்து பெறுவதற்கான ஆணையையும் கண்ணன் வழங்கினார்.
 

More from the section

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிலைகள் காணாமல் போன வழக்கு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அவகாசம்
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் திறப்பு
மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டுபிடிப்பு
அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோ மருத்துவனையில் அனுமதி
சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு