புதன்கிழமை 14 நவம்பர் 2018

ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா?

DIN | Published: 12th September 2018 01:40 AM


தமிழக அரசுக்கு தர வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி வரி பாக்கியை வழங்க மத்திய அரசுத் தயாரா என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சொல்ல முடியாத அளவுக்கு ஏற்றிக் கொண்டே போகிறது. இதனை நிச்சயமாக ஏற்க முடியாது. மத்திய அமைச்சர் 42 சதவீத வரியை தமிழக அரசுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் தவறான தகவலை அளிக்கக் கூடாது. வரி பங்கீட்டை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தினார்கள். அதனால் என்ன பலன் கிடைத்தது? தமிழகத்துக்குச் சேர வேண்டிய பணம் ரூ.6,000 கோடி இதுவரை வரவில்லை. இந்தத் தொகை வந்திருந்தால் நம்முடைய வரியை நிச்சயமாகக் குறைத்திருக்கலாம். ஆனால் ரூ.6,000 கோடியை அளிக்க மத்திய அரசு தயாரா? அதனை அளித்தால் வரியைக் குறைக்க மாநில அரசு பரிசீலனை செய்யும்.
ஏழு பேர் விடுதலை: ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அதற்கு திமுக என்ன நடவடிக்கையை அன்றைக்கு எடுத்தது? எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் அது குறித்துப் பேசுகிறார். காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.
காங்கிரஸை திமுக நிர்பந்திக்குமா?: கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் கட்சியை நிர்பந்தப்படுத்த வேண்டும். அதன் மூலம், தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வாக இருக்கக் கூடிய ஏழு பேர் விடுதலை குறித்து காங்கிரஸ் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக மக்களின் உணர்வை மதிக்கின்ற வகையில் திமுக இருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு உரிய நிர்பந்தம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று திமுக குரல் எழுப்பத் தயாராக உள்ளதா என்பதே என்னுடைய கேள்வி என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
 

More from the section

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
உலகம் சுற்றும் பிரதமராக மோடி விளங்கி கொண்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்
பலமானவர்களா? பலவீனமானவர்களா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்
போக்குக் காட்டும் கஜா புயல்: மீண்டும் பாதையை மாற்றியது
குட்கா வழக்கு: ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் மேலும் நீட்டிப்பு