செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

ஸ்டெர்லைட் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

DIN | Published: 12th September 2018 01:22 AM


தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்ற மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அறிக்கைக்குத் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விவரம்:
மத்திய அரசின் மத்திய நீர்வள ஆதார அமைப்பு தமிழக அரசின் முன் அனுமதியின்றி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் அடிப்படையில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மட்டுமே காரணம் இல்லை என கடந்த 5 -ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, வாரியம் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய நீர்வள ஆதார அமைப்பு தமிழக அரசிடமிருந்து எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் ஆய்வு நடத்தி, இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருப்பதால், அந்தப் பகுதியில் மீண்டும் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே அந்த அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக இரண்டு வார காலத்துக்குள் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். 

More from the section

திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி: முதல்வர் பழனிசாமி தாக்கு
2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது: பள்ளிகல்வித்துறை இயக்குநர் திட்டவட்டம்
இனியும் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் பேசினால் கருணாஸ் பதவிக்கு ஆபத்து: அமைச்சர் ஜெயகுமார்
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தது உறுதியாகிறது: மனோஜ் பாண்டியன்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை