புதன்கிழமை 21 நவம்பர் 2018

7 பேர் விடுதலை விவகாரம்: காங்கிரஸுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

DIN | Published: 12th September 2018 01:37 AM


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைச் செய்யக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது' என காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தக் கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 1999 -இல் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டமான தடா' சட்டத்தின்கீழ் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது செல்லாது எனக் கூறி, தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றிருந்த 19 பேரை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது. மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302 -இல்தான் தண்டனை அளிக்கப்பட்டது. 
எனவே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 மற்றும் 72 -ன்கீழ் இவர்களின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. ஆனாலும், திரும்பத் திரும்ப பயங்கரவாதிகள் என கூறுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத போக்காகும்.
7 பேர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பின்பற்றியே தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்த உண்மைகளை அடியோடு மறைத்து பயங்கரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது எனக் கூறுவது திசை திருப்பும் போக்காகும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

More from the section

சென்னையை கலகலக்க வைக்கக் காத்துக் கொண்டிருக்கும் கருமேகக் கூட்டம்!
புயல் நிவாரண நிதி: பிரதமரை நாளை சந்திக்கிறார் முதல்வர்
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள்
காமராஜர் துறைமுகத்தில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நிறைவு: இன்று இறுதி ஆய்வு
தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்