மாணவர்களுக்கு மன அழுத்தமாக மாறிவிட்டது தற்போதைய கல்வி முறை: ஜக்கி வாசுதேவ்

தற்போதைய கல்விமுறை மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடியதாக மாறிவிட்டது என்றும், மதிப்பெண் நோக்கிய நமது கல்வி முறையை மாற்ற வேண்டும் என்றும்
மாணவர்களுக்கு மன அழுத்தமாக மாறிவிட்டது தற்போதைய கல்வி முறை: ஜக்கி வாசுதேவ்


தற்போதைய கல்விமுறை மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடியதாக மாறிவிட்டது என்றும், மதிப்பெண் நோக்கிய நமது கல்வி முறையை மாற்ற வேண்டும் என்றும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
ஈஷா யோகா மையம் சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இளைஞரும் உண்மையும்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பெசன்ட் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறியதாவது:
உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்டதாக நம் நாடு உள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகையில் 65 கோடி பேர் இளைஞர்கள். இவர்களில் பலருக்கு தங்கள் இலக்கை நோக்கிய தெளிவு இல்லாததால் அவர்களால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் நாட்டின் முன்னேற்றமும் தடைபடுகிறது.
மதிப்பெண் நோக்கிய நமது கல்வி முறையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனால், மாணவர்களின் தற்கொலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையை மாற்ற பள்ளி வேலை நேரத்தில் 50 சதவீதம் கவ்விக்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீத நேரத்தை விளையாட்டு, இசை, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காக ஒதுக்க வேண்டும். இதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபடுவர். இது தொடர்பாக கல்விக் கொள்கையும் மத்திய அரசிடம் ஈஷா அமைப்பு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் தங்கள் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்த வேண்டும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களிலிருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம் உடலும், உள்ளமும் வலுப்பெறும் என்றார். 
18 பல்கலைக்கழகங்களில் நிகழ்ச்சிகள்: கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை, புணே, ஆமதாபாத், ஷில்லாங், வாராணசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 18 பல்கலைக்கழகங்களில் இளைஞரும் உண்மையும்' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டு உரையாற்றுவதுடன், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க 
உள்ளார். 
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தில்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளைஞரும் உண்மையும்' நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக ஈஷா யோகா மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com