சனிக்கிழமை 17 நவம்பர் 2018

லாரிகள் மூலம் நிலத்தடி நீர் விற்பனை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN | Published: 13th September 2018 12:48 AM


அனைத்து மாவட்டங்களிலும் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்பவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வல்லூர் பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சி லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இப்பகுதியில் நிலத்தடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்ற பிரச்னைகளால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் தனிப் பிரிவிலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்வதைத் தடுக்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வல்லூர் பகுதியில் நிலத்தடி நீரை முறைகேடாக எடுத்த 5 பேரின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசுத் தரப்பில் வட்டாட்சியர்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துச் செல்லும் லாரிகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இந்த வழியில் தண்ணீர் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு: அனைத்து மாவட்டங்களிலும் அனுமதியில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்பவர்கள் மீது எத்தனை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

More from the section

கார்த்திகை தீபம்: சென்னை- திருவண்ணாமலை இடையே 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக செல்லிடப்பேசி எண்: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறிமுகம்
சட்ட பல்கலை. பேராசிரியர் நியமன விவகாரம்: பதிவாளர் பதிலளிக்க உத்தரவு
சிலை கடத்தல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது