தீபாவளிக்குத் துணி எடுக்க 'தீ'நகர் போவதாக இருந்தால் ஆயுள் காப்பீடு எடுத்துவிடுங்கள்!

சென்னையில் உள்ள முக்கிய வணிகப் பகுதிகள் எதுவும் போதுமான தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பகுதிகளாகவே உள்ளதாக எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தீபாவளிக்குத் துணி எடுக்க 'தீ'நகர் போவதாக இருந்தால் ஆயுள் காப்பீடு எடுத்துவிடுங்கள்!


சென்னையில் உள்ள முக்கிய வணிகப் பகுதிகள் எதுவும் போதுமான தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பகுதிகளாகவே உள்ளதாக எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது, தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற முக்கிய வணிகப் பகுதிகளாக இருக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து நேரிட்டால்.. வேறு வழியே இல்லை மூச்சுத் திணறி அல்லது தீயில் கருகி அல்லது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கத்தான் வேண்டும்.. தப்பிக்க வாய்ப்பே இல்லை என அடித்து சத்தியம் செய்கிறது அங்கிருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகள்.

பொதுவாகவே கூட்டம் நிரம்பி வழியும் இப்பகுதிகளில் பண்டிகைக் காலங்கள் என்று சொன்னால் கூட்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். தீ விபத்து நேரிடவே வேண்டாம்.. தீ தீ என கத்தினால் ஏற்படும் கூட்ட நெரிசலே போதும் உயிரிழப்புகளுக்கு. அப்படிப்பட்ட ஒரு தெரு எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

ஆனால், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல தீ விபத்துகளை கண்கூடாகப் பார்த்தும், சமீபத்தில் சென்னை நகரின் பெயரைக் கொண்டிருக்கும் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடமே சாம்பலானப் பிறகும் கூட யாருமே விழித்துக் கொள்வதாக இல்லை.

தீத்தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத கட்டடங்களில் ஏற்பட்ட பல தீ விபத்துகளைத் தொடர்ந்து அனைத்து வணிக நிறுவனங்களிலும் தீத்தடுப்பு உபகரணங்களை அமைத்து, அதற்கான சான்றிதழ் பெற்று கடையின் அல்லது கட்டடத்தின் வாயிலில் வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்னும் உத்தரவாகவே உள்ளது. நடைமுறைக்கு வரவில்லை.

இது பற்றி வியாபாரிகளிடம் கேட்டால், தீத்தடுப்பு உபகரணங்களை அமைப்பதற்கு போதுமான நிதி இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

வெறும் கற்பனைக்காக மட்டும் எடுத்துக் கொண்டால் தி.நகரில் ஒரு தீ விபத்து நேரிடுகிறது. தீயணைப்பு வாகனங்களும் நேரத்துக்கு வந்துவிட்டன. அந்த குறுகலான சாலைக்குள் தீயணைப்பு வாகனம் நுழைய முடியுமா? இரவு நேரத்தில் கூட எப்படியோ சாமர்த்தியமாக நுழைந்து விடலாம். பகலில் கூட்ட நெரிசல் இருக்கும் போது மக்கள் கூட்டத்தைத் தாண்டி தீயணைப்பு வாகனம் எப்படி உள்ளே நுழைய முடியும்.

உடனடியாக தமிழக அரசு சாலைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் வருடா வருடம் மழைக்காலத்தில் வெள்ளத்தில் மிதந்து, கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் குறித்து கண்ணீர் விடும் நம்ம ஊரில் நடப்பது எப்போது? சாத்தியமா?

பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட வேண்டும் என்றால் அதற்கு 18 மீட்டர் அல்லது 12 முதல் 15 மீட்டர் அகலம் கொண்ட சாலை இருக்க வேண்டும். ஆனால் தி.நகரின் பல சாலைகள் வெறும் 4 மீட்டர் மட்டுமே. அங்கு பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட அனுமதி அளித்தது யார்?

அடுத்து, தீயணைப்புத் துறையின் சட்டவிதிகளின்படி அடுக்குமாடிக் கட்டடத்தில் ஒவ்வொரு 200 சதுர அடி பரப்பளவுக்கும் ஒரு 5 கிலோ தீத்தடுப்பு உபகரணம் பொருத்தப்பட வேண்டும். ஆனால் பல கட்டடங்களில் ஒரு மாடிக்கு ஒரு 5 கிலோ தீத்தடுப்பு உபகரணம் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.

90 சதவீதத்துக்கும் அதிகமான கட்டடங்கள், தானியங்கி தீத்தடுப்புக் கருவிகள் அமைக்கப்படவில்லை. பல அடுக்குமாடி வணிகக் கட்டடங்களின் அவசரகால படிகட்டுகளில் ஏராளமான சரக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

வணிக நோக்கத்தோடு பல கோடி செலவிட்டு கட்டடம் கட்டும் வியாபாரிகள், தினந்தோடும் கல்லாக்கட்டினால் போதும் என்று நினைக்காமல், கட்டடத்தை கட்டும்போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து, நுகர்வோரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் லாபத்துக்காக நுகர்வோரின் உயிரைப் பணயம் வைக்காதீர்கள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com