தமிழ்நாடு

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் காலதாமதம்: அதிக கட்டணம் செலுத்தும் நுகர்வோர்

 நமது நிருபர்

வீடுகளுக்கான மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் காலதாமதம் செய்வதால், தாங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.
 சென்னையில் உள்ள குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவை, வீடுகள்தோறும் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டர்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் இரு மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுத்துச் செல்வது வழக்கம். வீடுகள்தோறும் வழங்கப்பட்டுள்ள மின் பயன்பாட்டு குறிப்பு அட்டையை கணக்கெடுப்பாளர்கள் பெற்று, இரு மாத கால இடைவெளியில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதற்கான தொகை எவ்வளவு என்ற விவரத்தை குறித்து தருவர். அதையடுத்து நுகர்வோர் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திலோ அல்லது ஆன்-லைன் மூலமோ உரிய கட்டணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செலுத்துவது நடைமுறையில் உள்ளது.
 கணக்கெடுப்பதில் காலதாமதம்: இந்நிலையில், சென்னையின் சில பகுதிகளில் இப்பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் குறித்த காலத்துக்குள் வருவதில்லை எனவும், அவர்கள் காலதாமதமாக வந்து கணக்கிடுவதன் காரணமாக அதிக மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை தங்களுக்கு ஏற்படுகிறது எனவும் நுகர்வோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
 இதுகுறித்து காசிமேடு பகுதியில் வசித்து வரும் சாந்தி என்பவர் கூறியது:
 கடந்த 25 ஆண்டுகளாக ஒரு படுக்கை வசதி கொண்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்த வீட்டில் 5 டியூப் லைட்டுகள், சிறிய தொலைக்காட்சி பெட்டி, ஒரு மின்விசிறியைப் பயன்படுத்துகிறோம். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.600 தாண்டியதில்லை. ஆனால் கடந்த 6 மாதங்களாக இக்கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மின் கணக்கெடுக்கும் ஊழியரிடம் விசாரித்தபோது, குறிப்பிட்டுள்ள கட்டணத்தை குறித்த காலத்துக்குள் கட்டாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்து சென்றார். மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டால், மீட்டரை சரிபார்க்க வேண்டும் என்று கூறினர்.
 நான் சந்தித்த அதே பிரச்னையை அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்து வருவது தெரிய வந்தது. மின் பயன்பாடு கணக்கெடுப்புக்கு வரும் மின்வாரிய பணியாளர்கள் குறித்த தேதிக்குள் வராததுதான் இதற்கு காரணம் என தெரிய வந்தது. இப்பிரச்னை காசிமேடு பகுதி முழுவதும் உள்ளது என்றார் அவர்.
 எவ்வாறு கணக்கிடப்படுகிறது: மின்சார வாரியம் மாநிலத்தில் உள்ள 1.99 கோடி மின்பயனாளிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குகிறது. இதில் 1.66 கோடி நுகர்வோர் 100 யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்துகின்றனர். 0 - 200, 201- 500, 501- 1,100 யூனிட்கள் வரை என மூன்று பிரிவுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது.
 உதாரணமாக, மின்பயன்பாட்டை கணக்கெடுக்கும் நாள் 5 -ஆம் தேதி என்று கணக்கில் வைத்துக் கொண்டால், அன்று வரை மொத்தம் எவ்வளவு மின்பயன்பாடு உள்ளதோ, அதற்கான கட்டணம் தான் கணக்கில் வரும். ஆனால், அந்த குறிப்பிட்ட நாள் கடந்து, 3 அல்லது 5 நாள்கள் கழித்து காலதாமதமாக கணக்கெடுத்தால் கூடுதல் பயன்பாட்டை மின் மீட்டர் காட்டுவதுடன், கூடுதல் கட்டணத்தையும் செலுத்த நேரிடும்.
 மின்சார வாரிய பணியாளர்கள் குடியிருப்புகளில் காலம் கடந்து மின்பயன்பாட்டை கணக்கெடுப்பதால், அதிக கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு பயனாளிகள் தள்ளப்படுகின்றனர்.
 உரிய நடவடிக்கை: இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, "குடியிருப்புகளில் மின்பயன்பாட்டை கணக்கிடும் ஊழியர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாயம் சென்று கணக்கிட வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 எனவே அவர்கள் குறித்த காலத்துக்குள் சென்று கணக்கிட வேண்டும். ஒரு சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் வேண்டுமானால் சற்று காலதாமதம் ஆகலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி காலம் தாழ்த்துவது என்ற குற்றச்சாட்டு தற்போதுதான் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT