எய்ம்ஸ் அமையும் பகுதியில் இலவச மனை வழங்குவதாக வதந்தி: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த முன்னாள் ராணுவத்தினர்

எய்ம்ஸ் அமையும் பகுதியில் இலவச மனை வழங்குவதாக வதந்தி: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த முன்னாள் ராணுவத்தினர்

மதுரையில் எய்ம்ஸ் அமையும் தோப்பூர் பகுதியில் முன்னாள் ராணுவத்தினருக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய உள்ளதாக வதந்தி பரவியதையடுத்து,

மதுரையில் எய்ம்ஸ் அமையும் தோப்பூர் பகுதியில் முன்னாள் ராணுவத்தினருக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய உள்ளதாக வதந்தி பரவியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நூற்றுக்கணக்கானோர் திங்கள்கிழமை குவிந்தனர். 
 கடந்த சில வாரங்களாக முன்னாள் ராணுவத்தினர் பலரும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்து வருகின்றனர்.  இவர்களது எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரிக்கத் தொடங்கியது.
  மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளிக்க வந்தனர். அதன் பிறகு அதிகாரிகள் விசாரித்தபோது,  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் முன்னாள் ராணுவத்தினருக்கு தலா 3 சென்ட் மனை இடம் வழங்கப்பட உள்ளதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வதந்தி பரவியது.
 அதன்பேரிலேயே மனு அளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அதையடுத்து மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக இந்த தகவல் இதர மாவட்டங்களில் உள்ள முன்னாள் படைவீரர் அலுவலகத்துக்கு தெவிக்கப்பட்டு உண்மை நிலையை தெளிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.
 இருப்பினும் திங்கள்கிழமை (செப்.17) நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். முன்னாள் ராணுவத்தினருக்கு இலவச வீட்டுமனை வழங்குவது தொடர்பான  திட்டம் இல்லையெனக் கூறினாலும், அதில் திருப்தி அடையாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.  மனு அளிக்க வருவோரைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பதால் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 1,410 மனுக்கள் பெறப்பட்டன. 
 இவற்றில், வீட்டுமனை தொடர்பாக மட்டும் 1,104 மனுக்கள் வந்துள்ளன. அதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவை முன்னாள் ராணுவத்தினரால் வழங்கப்பட்டவை. இதில் மதுரை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களது மனுக்களும் அடங்கும்.
 வீட்டுமனை கேட்டு தனது மகனுடன் மனு அளிக்க வந்த திருநெல்வேலி மாவட்டம்  தென்காசியைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் கூறுகையில், ராணுவத்தில் பணியாற்றிய உறவினர் கூறியதையடுத்து இங்கு மனு அளிக்க வந்தேன். திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விசாரித்தபோது, சரியான தகவலைத் தெரிவிக்கவில்லை என்றார்.
 இலவச வீட்டுமனை தருவதாக தவறான தகவல் பரவியுள்ள நிலையில், அதுகுறித்து முன்னாள் படைவீரர் நல அலுவலகம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com