ஒசூர் விமான நிலையத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும்: தென்னிந்திய மண்டலக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஒசூர் விமான நிலையம் செயல்பட பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தென்னிந்திய மண்டலக் குழுவில் தமிழக துணை முதல்வ
ஒசூர் விமான நிலையத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும்: தென்னிந்திய மண்டலக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஒசூர் விமான நிலையம் செயல்பட பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தென்னிந்திய மண்டலக் குழுவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
பெங்களூரு விதான செளதாவில் செவ்வாய்க்கிழமை தென்னிந்திய மண்டலக் குழுவின் 28-ஆவது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது: 
தமிழக மீனவர்கள் மீது எல்லையைக் கடந்து மீன் பிடிப்பதாக அண்டை மாநிலங்களால் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்திய அரசின் ஆணையின்படி, இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிப் படகில் மீன் பிடிக்கத் தடையேதுமில்லை. இந்த நிலையில், மீனவர்கள் மீது குற்ற வழக்குகள் தொடர்வதை ஏற்க முடியாது. 
மின் உற்பத்தி: காற்று, சூரிய ஒளி மின்னாற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. மேலும், உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தியில் ஈடுபட்டால், அதை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை மாற்றிக் கொள்வதில் காணப்படும் சிக்கலை மத்திய அரசு தீர்த்துவைக்க வேண்டும்.
அனல் மின் உற்பத்தியின் தேவை நீடித்துவரும் நிலையில், நாளொன்றுக்கு தேவைப்படும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். 
மேலும், இந்த நிலக்கரியை உரிய முறையில் கொண்டுவர மத்திய ரயில்வே துறையும் உறுதியாகச் செயல்பட வேண்டும். 
மரக் கடத்தல் பிரச்னை தொடர்பாக ஜவ்வாது மலை மற்றும் அதன் சுற்றுப் பகுதி மக்களுக்கு வீட்டு வசதி, கல்வி மற்றும் சந்தன மர வளர்ப்பு, சுற்றுலா செயல்பாடுகள் வாயிலாக நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறோம். 
விமான நிலையம் தேவை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் மிக முக்கியமான தொழில் குவி மையமாகும். மத்திய அரசின் பிராந்திய இணைப்புத் திட்டத்தில்(Regional Connectivity Scheme-UDAN) ஒசூர் சேர்க்கப்பட்டுள்ளது. பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம் தடையில்லாச் சான்றிதழ் வழங்காததால், ஒசூர் விமான நிலையம் செயல்படாமல் உள்ளது. எனவே, ஒசூர் விமான நிலையத்தை உடனடியாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய விமானத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொருள் மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் தமிழக அரசுக்கு அளிக்க வேண்டிய பங்குத்தொகை ரூ.4 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக விடுவிக்க வேண்டும். எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. 
தமிழகம், கேரளம், கர்நாடக மாநில எல்லைகளில் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, ஒருங்கிணைந்த செயல்திட்டத்தின் கீழ் அமைந்துள்ள பாதுகாப்பு தொடர்பான செலவினப் பட்டியலில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்க்க வேண்டும். 
மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார் பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com