தமிழ்நாடு

தமிழகத்துக்கு 72,000 டன் நிலக்கரி: தினமும் வழங்க மத்திய அரசு ஒப்புதல்

DIN


தமிழகத்துக்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக மின் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
தில்லியில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயலை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிறகு அவர் இதனை தெரிவித்தார்.
தமிழகத்துக்கு உடனடியாக நிலக்கரி வழங்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் 15 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ஒடிஸாவில் ஏற்பட்ட மழையின் காரணமாக நிலக்கரி எடுத்து வர முடியாமல் போனது. இதனால், நிலக்கரி கையிருப்பு குறைந்துவிட்டது. தற்போது, வட சென்னையில் மூன்று நாள்கள், தூத்துக்குடியில் 6 நாள்கள் என்ற நிலையில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. இந்நிலையில்தான், தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்தேன். அப்போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலக்கரியை 13 வேகன்களாக இருப்பதை 16 வேகன்களாக அதிகரிக்குமாறும், நிலக்கரி கையிருப்பை அதிகரிக்கும் வகையில் வேகன்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தவும் வலியுறுத்தினோம். 16 வேகன்கள் (72,000 டன்) நிலக்கரியை தினமும் வழங்க அமைச்சர் ஒப்புக்கொண்டார். மேலும், சூழ்நிலை சரியானதும் வேகன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் உறுதியளித்தார். 
மின்வெட்டு இருக்காது: தமிழகத்தில் எந்தச் சூழலிலும் நிச்சயமாக மின்வெட்டு வராது. நிலக்கரி விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதிய பிறகு இரு தினங்களில் எட்டு வேகன்கள் என்பது 13 வேகன்களாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், நிலக்கரி வழங்கல் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தியதும், அவர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து தமிழகத்திற்கு 16 வேகன்கள் நிலக்கரியை அனுப்புமாறு உத்தரவிட்டார். இதனால், மூன்று, நான்கு தினங்களில் தமிழகத்திற்கு நிலக்கரி வந்து சேர்ந்துவிடும்.
சீரிய நடவடிக்கை: 2016, டிசம்பரில் வர்தா' புயல் வந்த போது மின் அமைப்புகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகின. ஆனால், அப்போது மின்சார வாரியம் துரிதமாக செயல்பட்டு மூன்று நாள்களில் 100 சதவீதம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்தது. தமிழக அரசு துரிதமாக செயல்படுவதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. ஒக்கி புயல் பாதிப்பின் போது மின்சாரம் இரு தினங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் அமைச்சர் தங்கமணி.
பின்னர், மத்திய மின் துறை இணையமைச்சர் (தனி) ஆர்.கே. சிங்கை அவரது அலுவலகத்தில் அமைச்சர் பி.தங்கமணி மாலையில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க வேண்டிய மின்சாரம், பாதி அளவுக்குத்தான் வழங்கப்படுவதாகவும் அதை 6,152 மெகாவாட் மின்சாரம் என்ற அளவில் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அமைச்சர் தங்கமணி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம்'
நிலக்கரி விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில்தான் அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது அனல் மின்நிலையங்களில் ஒரு நாளைக்கான நிலக்கரி இருப்பு மட்டுமே இருந்தது. ஆனால், தேர்தல் ஆதாயத்துக்காக தற்போது இந்த விஷயத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாகக் கொண்டு செல்வதில் அரசு உறுதியாக உள்ளது.
தமிழகத்தில் நிலக்கரி குறைவாக இருப்பதால் 30 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. தூத்துக்குடிக்கு உடனடியாக 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பாக்கியுள்ள நிலக்கரி விஷயத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட் ஆகும் . அதே சமயம், மாநிலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் காற்றாலை மின்சாரமும் சூரிய மின்சாரமும் சேர்க்கப்படவில்லை. தமிழகம் எப்போதும் மின்மிகை மாநிலமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள்தான் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
மின்சாரத்தின் தேவை குறைந்ததன் காரணமாகவே, தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. மின்சாரத் தேவை குறைந்திருப்பதால்தான் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதே தவிர, நிலக்கரி பற்றாக்குறையால் அல்ல. இதேபோன்று, மேட்டூர் அனல் மின்நிலையத்திலும் 400 மெகாவாட் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது என்றார் அமைச்சர் தங்கமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT