தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை

சிறிய அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் பயன்படக் கூடிய வகையில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பாரா மெடிக்கல்

சிறிய அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் பயன்படக் கூடிய வகையில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பாரா மெடிக்கல் லேப் கல்வி, நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாரா மெடிக்கல் லேப் கல்வி, நலச் சங்கத்தின் தேசியத் தலைவர் காளிதாசன், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் கூறியது:
தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் சிறிய அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு தற்போது இயற்றியுள்ள தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தில் நகரம் அல்லாத இடங்களில் மருத்துவ ஆய்வகம் அமைக்க 500 சதுர அடியும், நகர்ப்புறத்தில் 700 முதல் 1,500 சதுர அடியும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறம், நகர்ப்புறத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்தின் உரிமையாளர்கள், அதில் பணியாற்றுபவர்கள் என சுமார் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெருநிறுவனங்கள் நடத்தும் மருத்துவ ஆய்வகத்துக்கு சாதகமானதாக உள்ளது.
எனவே, சிறிய அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் பயன்படக் கூடிய வகையில் 100 சதுர அடியில் சிறிய ஆய்வகங்கள் நடத்த ஏதுவாக தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தில் மருத்துவ ஆய்வக நுட்பநர்களுக்கான கல்வித் தகுதியில் அரசு சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசு அங்கீகாரம் பெறாத கல்வி நிலையங்களில் பயின்ற சுமார் 50 ஆயிரம் ஆய்வக நுட்பநர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். மருத்துவத் துறை ஆலோசனைக் குழுவில் பாரா மெடிக்கல் துறையைச் சேர்ந்த ஒருவரையும் உறுப்பினராகச் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com