தமிழ்நாடு

லோக் ஆயுக்த அமைப்புக்கு தலைவர், உறுப்பினர்களை ஏன் நியமிக்கவில்லை?: ஸ்டாலின் கேள்வி

DIN


ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக் ஆயுக்த அமைப்புக்குத் தலைவர், உறுப்பினர்களை ஏன் நியமிக்கவில்லை? என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதிமுக அரசின் ஊழலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசியது:
நான் தி.மு.க. தலைவரானப் பிறகு களம் காணும் முதல் ஆர்ப்பாட்டம் இது. 1949-இல் சேலத்தில் உள்ள கோட்டைப் பகுதியில்தான் மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி குடியிருந்தார். இங்குள்ள மாடர்ன் தியேட்டருக்காக பல திரைப்படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியுள்ளார்.
தமிழகத்தை மீட்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தி.மு.க.வுக்கு உண்டு. சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவது, மாநில ஆட்சியை அகற்றுவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க.வின் ஊழல் குறித்து விசாரணை நடத்த தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கச் சென்றால், அந்தத் துறையின் அதிகாரி பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார். தமிழக டி.ஜி.பி.யைச் சந்திக்கச் சென்றால், அவர் குட்கா ஊழலில் சிக்கியுள்ளார். 
நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். நான் பேசுவதில் தவறு என்று கருதினால், தைரியம், துணிவு இருந்தால் என் மீது வழக்குத் தொடரட்டும். ஆனால், அவர்கள் வழக்குப் போடும் நிலையில் இல்லை. காரணம் அவர்களே ஊழலில் சிக்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜூலை 16, 17 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் செய்யாதுரை, நாகராஜன் வீடுகளில் சோதனை நடத்தியதில் ரூ. 180 கோடி பணம் ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சம்பந்தி ஆவார். மேலும், செய்யாதுரை, நாகராஜன், சுப்பிரமணியம் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்துக்கு சுமார் ரூ. 3,120 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். 
உலக வங்கி நிதியில் நடைபெறும் திட்டங்களுக்கு டெண்டர் வழங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதன் மூலம் உலக வங்கி நிதி தமிழகத்துக்குக் கிடைக்காமல்போகும் சூழல் உள்ளது.
ஊழலைத் தடுக்கத்தான் லோக் ஆயுக்த சட்டத்தைக் கொண்டுவர தி.மு.க. வலியுறுத்தி வந்தது. ஒருபக்கம் சட்டத்தை ஏற்படுத்தினாலும், அந்த அமைப்புக்கு இதுவரை தலைவர், உறுப்பினர்களை ஏன் நியமிக்கவில்லை? 
சேலம்- சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற மத்திய அரசின் கட்டாயத்துக்கு தமிழக அரசு உள்ளது. இத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக, மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இத் திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரைப் பற்றி அரசுக்குக் கவலையில்லை என்றார்.
வீரவாள் பரிசு: சேலம் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்டம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வீரவாள், கேடயம் வழங்கப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT