புழல் சிறையில் மீண்டும் திடீர் சோதனை: பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலிடம் டி.வி.க்கள் பறிமுதல்

சென்னை புழல் மத்திய சிறையில் மீண்டும் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் இந்து இயக்கத் தலைவர்கள் கொலை வழக்கில் கைதான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை சோதனையிட்ட பின்பு வெளியே வந்த போலீஸார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை சோதனையிட்ட பின்பு வெளியே வந்த போலீஸார்.


சென்னை புழல் மத்திய சிறையில் மீண்டும் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் இந்து இயக்கத் தலைவர்கள் கொலை வழக்கில் கைதான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் அறைகளில் இருந்து டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது.
புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது.
இச்செய்தியின் எதிரொலியாக சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் கடந்த 13-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினார். இதையடுத்து கடந்த 14, 15-ஆம் தேதிகளில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 20 டி.வி.க்கள், மிக்ஸி, பழச்சாறு பிழியும் கருவி, சமையல் பாத்திரங்கள், பீடி, வெளிநாட்டு சிகரெட், திரைச்சீலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இது தொடர்பாக தண்டனைச் சிறையில் ஏ பிரிவில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர், சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் காவல்துறையினரும், சிறைத்துறையினரும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தி பீடி, சிகரெட் பாக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேலும் புழல் மத்திய சிறையில் இருந்து கடந்த இரு நாள்களில் 4 தலைமை வார்டர்கள் உள்பட 17 சிறைக் காவலர்கள் வேறு சிறைகளுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மீண்டும் சோதனை: இந்நிலையில் புழலில் உள்ள தண்டனை சிறைப் பகுதியில் சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தலைமையில் சிறைக் காவலர்கள் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை கண்டம் எனப்படும் சிறைப் பகுதியில் நடைபெற்றது.
இதில் இந்து இயக்கத் தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் அடைக்கப்பட்டிருக்கும் அறைகளில் காவலர்கள் சோதனையிட முற்படும்போது, அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனராம். உயர் பாதுகாப்புப் பிரிவில் சோதனை நடத்திவிட்டு, தங்களது அறையில் சோதனையிடுமாறு அவர்கள் முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சிறைக் காவலர்கள், அவர்களது எதிர்ப்பையும் மீறி அந்த அறைகளில் சோதனையிட்டனர்.
இச்சோதனையில், அங்கிருந்து இரு டி.வி.க்கள், 20 கிலோ பாசுமதி அரிசி, சுமார் 5 கிலோ பருப்பு வகைகள், 2 கிலோ காய்கறி, பாடி ஸ்பிரே, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும், சிறை வளாகத்தில் பழைய பொருள்கள் வைக்கும் அறையில் வைக்கப்பட்டன.
ஒரே வாரத்தில் மூன்றாவது முறை: மேலும், ஒரே வாரத்தில் புழல் சிறையில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏ பிரிவு சிறைக் கைதிகள், சிறைத்துறை அனுமதி பெற்று டி.வி., ரேடியோ உள்ளிட்டவற்றை வைத்திருப்பதாகவும், அந்த புகைப்படங்களே வெளியானதாகவும் சிறைத்துறை கூறி வந்த நிலையில், ஏ பிரிவுக்குத் தொடர்பு இல்லாத கண்டம் சிறைப் பகுதியில் இருந்து டி.வி. உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதேவேளையில் சமூக விரோதச் செயல்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படும், முதல்நிலை பாதுகாப்புப் பிரிவு, உயர் பாதுகாப்புப் பிரிவு ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தாமல் இருப்பது சிறைத் துறையினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது

பாளையங்கோட்டையிலும் சோதனை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் ஆய்வாளர்கள் தில்லைநாகராஜன், காளியப்பன், பால்ராஜ் உள்பட 75 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் புதன்கிழமை காலையில் சென்றனர். கைதிகளின் அறைகள், சமையலறை, நூலகம், மருத்துவமனை, தோட்டங்கள் உள்பட சிறைவளாகம் முழுவதிலும் போலீஸார் சோதனையிட்டனர். காலை 6 மணி முதல் 7.20 வரை சோதனையிட்ட பின்பு போலீஸார் வெளியேறினர். 
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், இச்சோதனையில் 12 செ.மீ. நீளம் கொண்ட இரு இரும்புக் கம்பிகள் மட்டுமே கைப்பற்றப்பட்டன. முதல் வகுப்பு அறைகளிலும் சிறைத்துறை விதிகளுக்கு உள்பட்டே பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவுப் பொருள் தயாரிப்புக் கூடம், சமையலறைகளிலும் கண்காணிப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com