யானைகளை கோயில்களுக்கு கொண்டு செல்லத் தடைகோரி மனு: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

யானைகளை வனப்பகுதியில் இருந்து கோயில்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு கொண்டு செல்லத் தடை கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்


யானைகளை வனப்பகுதியில் இருந்து கோயில்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு கொண்டு செல்லத் தடை கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளிண்டன் ரூபின் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: முதுமலை வனப்பகுதியில் கடந்த 2007-இல் தாயை இழந்த நிலையில் 3 வயதுடைய குட்டி யானை வனத்துறையினரால் மீட்கப்பட்டு, மாசினி என்று பெயர் சூட்டப்பட்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் 9 வயது வரை வளர்க்கப்பட்டது. இந்த யானையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 2016-இல் வழங்கினார். 
தெப்பக்காடு வனப்பகுதி முகாமில் இருந்தபோது சுறுசுறுப்பாக இருந்த யானை சமயபுரம் கோயிலில் தனிமைப்படுத்தப்பட்டதால் யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த மே 25-ஆம் தேதி மாசினி யானைக்கு மதம் பிடித்த நிலையில் பாகன் ராஜேந்திரனை கோயிலில் மிதித்துக் கொன்றது. அப்போது 9 பக்தர்களும் காயமடைந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்கு யானை சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது.
வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன்படி அட்டவணை 1-இல் பாதுகாக்கப்பட்ட வனஉயிரினமாக யானை வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யானைகளை துன்புறுத்துதலில் இருந்து பாதுகாப்பதற்காக சுற்றுசூழல் மற்றும் வனத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
எனவே ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சிக் கல்லூரியில் உள்ள சமயபுரம் கோயில் யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்க்க வேண்டும். யானைகளை அதன் இருப்பிடமான வனப்பகுதிகளில் இருந்து கோயில் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வன உயிரினங்களை அதன் இருப்பிடமான வனப்பகுதியில் இருந்து பிரித்து கோயில்கள் மற்றும் பிற இடங்களில் எதன் அடிப்படையில் வளர்க்கப்படுகிறது? யானையை வனப்பகுதியில் இருந்து பிரித்து வளர்ப்பது, அவற்றை துன்புறுத்துவது போன்றது என்று நினைக்கவில்லையா? இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com