டீசல் விலையேற்றம்; குறையும் பயணிகள் எண்ணிக்கை: அரசுப் பேருந்துகளின் இயக்கம் தற்காலிகமாகக் குறைப்பு

ஒருபுறம் டீசல் விலையேற்றம் மறுபுறம் குறையும் பயணிகள் எண்ணிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, பல வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளில் இயக்கம் 
டீசல் விலையேற்றம்; குறையும் பயணிகள் எண்ணிக்கை: அரசுப் பேருந்துகளின் இயக்கம் தற்காலிகமாகக் குறைப்பு


ஒருபுறம் டீசல் விலையேற்றம் மறுபுறம் குறையும் பயணிகள் எண்ணிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, பல வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளில் இயக்கம் 
தற்காலிகமாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி என 6 கோட்டங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மதுரை மற்றும் திருநெல்வேலி கோட்டங்களை இணைப்பதற்கு அண்மையில் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, நீண்டதூர பேருந்துகள் இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியன செயல்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் சுமார் 24 ஆயிரம் அரசுப் பேருந்துகள் உள்ளன. தினமும் 2 கோடி பேர் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசுப் பேருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகளுக்கான செலவினம், அதிகாரிகள்-பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம், கடன் சுமை போன்றவற்றால் வருவாயைக் காட்டிலும் செலவினம் அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில், 2011-க்குப் பிறகு அரசுப் பேருந்துகளின் கட்டணம் கடந்த ஜனவரியில் உயர்த்தப்பட்டது. முந்தைய கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்த்தியது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
டீசல் விலையேற்றம் மற்றும் நஷ்டத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்பதற்கு கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர் கூறிவந்தனர். ஆனால், கட்டண உயர்வுக்குப் பிறகும் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய்க்கும், செலவினத்துக்கும் இடைவெளி தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன்கள் வழங்குவதில் இழுபறி இருந்து வருகிறது. பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால், அரசுப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மளமளவென சரிந்துள்ளது. அதேநேரம், கட்டண உயர்வின்போது இருந்த டீசல் விலை தற்போது கட்டண உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துவிட்டதால் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டதாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2017 ஜூன் மாதத்தில் தமிழகம் முழுவதும் 2 கோடியே 36 லட்சத்து 22 ஆயிரத்து 600 பேர் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை நிகழாண்டு ஜூனில் 1 கோடியே 78 லட்சத்து 38 ஆயிரத்து 200 ஆகக் குறைந்திருக்கிறது.
கட்டணம் உயர்த்தியும், வருவாய் உயராத நிலையில் செலவினத்தைச் சுருக்க பேருந்து வழித்தடங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் போக்குவரத்துக் கழகங்கள் ஈடுபட்டுள்ளன. 
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் நகரப் பேருந்து மற்றும் புறநகரப் பேருந்துகள் என சுமார் 1,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் கடந்த 3 மாதங்களாக வழித்தடங்கள் குறைக்கப்பட்டு சுமார் 100 பேருந்துகள் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 
கட்டணம் உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், வழித்தடங்கள் குறைப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம் வழித்தடங்களில் கிராமப் பகுதிகளுக்கான சேவை குறைக்கப்பட்டிருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com