தாமிரவருணி புஷ்கரத்துக்கு 2 இடங்களில் தடை: தைப்பூச மண்டப பூட்டை உடைக்க இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு

திருநெல்வேலி குறுக்குத்துறை மற்றும் தைப்பூச மண்டப படித்துறைகளில் தாமிரவருணி புஷ்கர விழா நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,


திருநெல்வேலி குறுக்குத்துறை மற்றும் தைப்பூச மண்டப படித்துறைகளில் தாமிரவருணி புஷ்கர விழா நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து முன்னணியினர் தைப்பூச மண்டபப் பூட்டை உடைக்கப் பேரணியாகச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாமிரவருணி மஹா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், குறுக்குத்துறை மற்றும் தைப்பூச மண்டபம் ஆகிய இரு படித்துறைகளில் புஷ்கர விழா நடத்த மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, பிள்ளையன் கட்டளை நிர்வாகத்தினர் தைப்பூச மண்டபத்திற்கு பூட்டுப் போட்டனர். 
இந்நிலையில், பூட்டப்பட்ட தைப்பூச மண்டப பூட்டை உடைக்க இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் முழக்கமும் எழுப்பினர். மண்டபத்தின் அருகில் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், வட்டாட்சியர் கோமதிநாயகம் மற்றும் அதிகாரிகள் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிள்ளையன்கட்டளை செயல் அலுவலர் மகேந்திரன், இந்து முன்னணியினரிடம் பேசினார். சட்டவிரோதமாக கூடக் கூடாது என மகேந்திரன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்பிறகு தடை குறித்து ஆட்சியரிடம் பேசி தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com