கருணாஸுக்கு ஒரு சட்டம்! ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கருணாஸுக்கு ஒரு சட்டம்! ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

திருவாடனைத் தொகுதி எம்எல்ஏ கருணாஸ், முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது. பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருமளவுக்கு இருக்கிறது.

ஆனால், அதே நேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை வேண்டுமென்றே கைது செய்துள்ளனர். பெரியார் சிலையை உடைப்பேன் என்றும்,  உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல் துறையையும் விமர்சித்ததாலும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இதுவரை கைது செய்யப்படவில்லை.

அதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை கைது செய்ய அதிமுக அரசு தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை.

ஆகவே, கருணாஸுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா மற்றும் திரு எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அதிமுக அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது. கூவத்தூர் மர்மமும், ரகசியமும் வெளிச்சத்துக்கு வந்து விடக்கூடாது என்ற காரணத்துக்காகவே கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com