தமிழ்நாடு

காட்டாற்று வெள்ளத்தைப் பயணிகளுடன் கடக்கும் வாகனங்கள் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

டி. சாம்ராஜ்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்குச் செல்ல 3 காட்டாறுகளைக் கடந்து செல்ல வேண்டும். இப்பகுதிகளில் பாலம் இல்லாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப் பகுதியில் மாக்கம்பாளையம் மலைக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு 25 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். மாக்கம்பாளையத்தில் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்கள் தினந்தோறும் மாக்கம்பாளையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் அரசுப் பேருந்து மூலம் கடம்பூர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
 மாக்கம்பாளையம் வழித்தடத்தில் உள்ள கோம்பைத்தொட்டி, அருகியம், குரும்பூர், மொசல்மடுவு பகுதி மாணவர்களும் அதே பேருந்தில் கடம்பூர் பள்ளிக்கு வருகின்றனர். அதேபோல, பள்ளி முடிந்து கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு மாலை 6.30 மணிக்குப் புறப்படும் அரசுப் பேருந்தில் பயணித்து 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வீடு திரும்புகின்றனர்.
 மாக்கம்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சர்க்கரைப்பள்ளம், மாமரத்துப்பள்ளம் ஆகிய பள்ளங்களில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இக்கிராமத்துக்கு ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டும் காலை, பிற்பகல், மதியம், மாலை என நான்கு முறை இயக்கப்படுகிறது. மழைக் காலத்தில் பாதுகாப்பு கருதி அதுவும் இயக்கப்படுவதில்லை.
 கடந்த வாரங்களில் பெய்த மழையால் மாக்கம்பாளையம், சர்க்கரைப்பள்ளம் ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கடம்பூர், மாக்கம்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாடகை சரக்கு வாகனங்கள் கூட வருவதில்லை.
 காட்டாற்று வெள்ள அபாய எச்சரிக்கையால் காலை, மாலை நேரங்களில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் பாதுகாப்புக் கருதி இயக்கப்படுவதில்லை. பள்ளி முடிந்து மாக்கம்பாளையம் செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் கடம்பூரில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்படும் அரசுப் பேருந்தில் ஏறுவார்கள். மாக்கம்பாளையம் வழித்தடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சர்க்கரைப்பள்ளத்துடன் பேருந்து நின்றுவிடும். சில நேரங்களில் மாணவர்கள் காட்டு வழியாக 4 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகிறது.
 தினந்தோறும் பள்ளி செல்லவும், விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லவும் அவதிப்படும் அப்பகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க பாலம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 இதுகுறித்து, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மூர்த்தி கூறியதாவது:
 கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே ஓடும் பள்ளத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் சாலை வசதி துண்டிக்கப்படுகிறது. அஞ்சலைப் பிரிவில் இருந்து மாக்கம்பாளையம் கிராமங்களிடையே 2 பாலங்கள் கட்டிக் கொள்ள வனத் துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுமானத் துறையினர் சார்பில், இரு பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT