ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் தலைமையில் 2-ஆவது நாளாக ஆய்வு

ஆய்வு மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை தூத்துக்குடி வந்தனர். 
ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் தலைமையில் 2-ஆவது நாளாக ஆய்வு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடியில் சனிக்கிழமை தங்களது ஆய்வைத் தொடங்கினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து கடந்த மே 28 ஆம் தேதி ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. ஆலையை இயக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முடிவை எட்டும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.

இதையடுத்து, ஆய்வு மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை தூத்துக்குடி வந்தனர். அந்தக் குழுவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை விஞ்ஞானி சதீஷ் டி. கார்ஹோட்டி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தென் மண்டல விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஆர். கண்ணன், மனோகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லெவிங்டன் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆய்வு தொடர்பான அறிக்கை 6 வாரங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்படும் என, ஆய்வுக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com