தமிழ்நாடு

அஞ்சல்துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: செப்.30க்குள் அனுப்ப வேண்டும்!

தினமணி

மக்கள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், "என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' எனும் தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படுகிறது. கடிதங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
 மக்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, கடிதம் எழுதும் போட்டியை நடத்த அஞ்சல் துறை முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு முதன்முறையாக அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல்துறை நடத்தியது. "மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதுதல்' எனும் தலைப்பில் போட்டி நடைபெற்றது. 5 லட்சம் பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் 4 பிரிவுகளில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து இருவர் வெற்றி பெற்றனர்.
 நிகழாண்டில் இரண்டாவது முறையாக கடிதம் எழுதும் போட்டி இந்திய அஞ்சல் துறை சார்பில் ஜூன் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ரபீந்திரநாத் தாகூரின் "ஆமார் தேஷேர் மாதி' என்ற பெங்காலி மொழி தேசபக்திப் பாடலின் அடிப்படையில் "என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்கடிதத்தை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதவேண்டும்.
 கடிதத்தை, முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உறையின் மேல், அஞ்சல் துறைக் கடிதப் போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்.
 4 பிரிவுகளில் போட்டி: 18 வயதுக்கு உள்பட்ட மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இந்த 2 பிரிவுகளிலும் இன்லாண்டு லெட்டர் பிரிவு, என்வலப் பிரிவு (கடித உறை) ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
 கடிதத்தின் அளவு: என்வலப் பிரிவில் எழுதுவோர் ஏ-4 அளவு வெள்ளைத்தாளில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அஞ்சலகங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகள், தேவையான அளவு அஞ்சல் தலை ஒட்டப்பட்டவை மற்றும் இன்லாண்டு லெட்டர் கார்டுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
 பரிசுத் தொகை ரூ.50,000: மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாவது பரிசாக ரூ.10,000 மூன்றாவது பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.25,000, மூன்றாவது பரிசாக ரூ.10,000 வழங்கப்படும்.
 வயது சான்றிதழ் வேண்டும்: இது குறித்து தமிழக அஞ்சல் துறை நிர்வாகத்தினர், போட்டியில் பங்கு பெறுவோர், கடிதத்தின் மேல், " 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி எனது வயது 18-க்கு மேல், 18-வயதுக்கு கீழ் என்று சான்றளிக்கிறேன்' என்று வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும்.
 வெற்றி பெறும் போட்டியாளர்களின் வயதுச் சான்றிதழ் பரிசோதிக்கப்பட்ட பின்னரே, பரிசுக்குப் பரிந்துரைக்கப்படும். கட்டுரைகள் புலமை வாய்ந்த நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் படித்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்வர் என்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT