தமிழ்நாடு

எல்லையால் தொல்லை: புதுவை - தமிழக அரசுகள் பேச்சுவார்த்தை நடத்துமா?

DIN

புதுச்சேரி: புதுவை மாநில எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லையே தொல்லையாக இருந்து வருகிறது.
 இந்தப் பிரச்னைக்கு புதுவை, தமிழகம், கேரளம், ஆந்திர அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 பிரான்ஸ் நாட்டினர் இந்தியாவில் முதன் முதலில் 1673-ஆம் ஆண்டில் காலூன்றிய நிலப்பகுதி புதுவைதான்.
 புதுச்சேரி, காரைக்கால், மாஹி (மய்யழி), ஏனாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது இன்றைய புதுவை மாநிலம். பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோது புதுவையுடன் இருந்த சந்திரநாகூர் 1954-ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.
 காரைக்கால் பகுதியானது, தமிழகத்தின் பொறையாறு அருகே உள்ளது.
 மாஹி பகுதி, கேரள மாநிலத்தின் கோழிக்கோடு - கண்ணூர் மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
 ஏனாம், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தெற்கே உள்ளது.
 இந்திய விடுதலைக்குப் பிறகு, 1.11.1954-இல் இந்தியாவுடன் புதுவை இணைந்தது. இருப்பினும், 16.8.1962-இல் தான் இந்தியா - பிரான்ஸ் இடையே அதிகார மாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
 1963-ஆம் ஆண்டு சட்டத்தின்படி, இந்திய அரசின் ஆட்சிக்கு உள்பட்ட பகுதியானது புதுவை.
 புதுவை இப்போது தனி யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில், தமிழகம், கேரளம், ஆந்திரம் மாநில எல்லை பகுதிகளில் வாழும் புதுவை மக்கள் எல்லைப் பிரச்னையால் ஐம்பது ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 அதிலும் எல்லைப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுவை - தமிழக எல்லையில் இருக்கும் வாதானூர், புராணசிங்குபாளையம் ஆகும்.
 இவ்விரு கிராமங்களும் புதுவை மாநிலத்தில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திலும், விழுப்புரம் மாவட்டத்தின் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலும் இடம் பெற்றுள்ளன.
 வாதானூரில் புதுவை, தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டில் தனித்தனி கிராம நிர்வாக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கிராமங்களில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த பகுதிகள் குழப்பமான நிலையில் உள்ளன.
 உதாரணமாக, ஒரு வீடு புதுவை மாநிலத்துக்கு உள்பட்டதாக இருந்தால் எதிர் வீடு, பக்கத்து வீடு தமிழக எல்லையில் உள்ளது. சில வீடுகளில் படுக்கை அறை ஒரு மாநிலத்திலும், சமையல் அறை மற்றொரு மாநிலத்திலும் இருக்கும் விசித்திர நிலை உள்ளது.
 அதே நேரத்தில், இங்கு புதுவை - தமிழக மாநிலங்களுக்கு பொதுவான இடங்கள் என சில பகுதிகளும் உள்ளன. இங்குள்ள வீடுகள், கட்டடம், கோயில் உள்ளிட்டவை இரு மாநிலங்களுக்கும் பொதுவாக இருப்பதால் இவற்றுக்கு வீட்டு வரி, காலியிட வரி வசூலிப்பது யார் என்ற குழப்பம் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பட்டா பெற முடியாத நிலை உள்ளது.
 இதுகுறித்து மண்ணாடிப்பட்டு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டி.பி.ஆர். செல்வம் கூறியதாவது:
 வாதானூர், புராணசிங்குபாளையத்தில் தமிழகம், புதுவை பகுதிகள் கலந்து இருப்பதால் ஒரு காலத்தில் இரு மாநிலங்களிலும் இங்குள்ள மக்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வைத்திருந்தனர். ஆனால், ஆதார் அட்டை அமல்படுத்தப்பட்ட பிறகு, இங்குள்ள மக்கள் ஏதாவது ஒரு மாநிலத்தில் மட்டுமே வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை மற்றும் இதர ஆவணங்களை வைத்திருக்கின்றனர்.
 மேலும், பெரும்பாலான வீட்டு மனைகள் இரு மாநில எல்லைக்குள்ளும் வருகின்றன. குடும்ப சொத்து பாகப் பிரிவினை செய்யும்போது புதுவை மாநிலத்தவர், தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டினர் புதுவையிலும் குடிபெயரும் சூழல் எழுகிறது. இதனால், இவர்களது குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் சேரும்போது இருப்பிடச் சான்று உள்ளிட்ட பிற சான்றுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
 வாதானூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை புதுவை - தமிழக இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு புதுவை, தமிழகம் சார்பில் தலா ஒரு கோயில் நிர்வாக அலுவலர் உள்ளார். இதுபோன்ற இரண்டு நிர்வாக முறைகளால் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
 அதேபோல, தற்கொலை, கொலை போன்ற அகால மரண சம்பவங்கள் நடக்கும்போது, புதுவை காவல் துறையினரும் தமிழக காவல் துறையினரும் எல்லை பிரச்னையைக் காரணம் காட்டி இழுத்தடிக்கும் நிலை ஏற்படுகிறது. சடலத்தை பிரேத பரிசோதனை செய்து இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள மூன்று நாள்களுக்கும் மேல் ஆகிறது.
 புதுவையில் நியாய விலைக் கடைகளில் அரிசி பல மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், தமிழகத்தில் பருப்பு, உளுந்து, அரிசி உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் எதிர் வீட்டுக்குக் கிடைக்கும் சலுவை நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் புதுவை மக்களிடம் எழுகிறது.
 மேலும், தமிழகம்-புதுவைக்குச் சொந்தமான பொது இடங்களில் வசிக்கும் மக்கள் படும்பாடு மிகவும் வேதனையானது. அவர்களிடம் ஆதார் அட்டை இருந்தும் கூட, புதுவை மாநிலத்தில் உரிய சலுகைகள் பெற முடியாத நிலை நீடிக்கிறது. குழந்தைகள் பள்ளி, கல்லூரியில் சேரும்போது சான்றிதழ் கிடைக்க முதல்வர் அலுவலகம் வரை போராட வேண்டி உள்ளது.
 எனவே, புதுவை - தமிழக அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதி மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அதுவரை ஆதார் அட்டை தகவல் அடிப்படையில் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் செல்வம்.
 இது குறித்து புதுவை முதல்வர் வே. நாராயணசாமியிடம் கேட்டபோது, பேச்சுவார்த்தை மூலம் இப்பகுதி மக்களின் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அவர் கூறியதாவது:
 வாதானூர், புராணசிங்குபாளையத்தில் பொதுஇடங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிக பாதிப்பு உள்ளது. அதே போல, புதுவையின் பிற பகுதிகளிலும் சிறு சிறு எல்லைப் பிரச்னைகள் உள்ளன. மாஹி பிராந்தியத்தில் கல்லாயி, சாளக்கரா பகுதிகளில் நான்கு இடங்களுக்கு கேரளமும், புதுவையும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
 சாளக்கரா கிராமத்தில் வாழும் நான்கு குடும்பங்களில் ஒருவரது வீடு மட்டும் புதுவை எல்லைக்குள் உள்ளது. ஆனால், அந்த வீட்டுக்கு கேரள அரசு மின் இணைப்பு கொடுத்துள்ளது. அந்த வீட்டை கேரளத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
 அதே கிராமத்தில் உள்ள கேரள குடும்பத்தினருக்கு சொந்தமான இந்துக் கோயில் புதுவை - கேரள எல்லைக்குள் உள்ளது. கோயில் நிர்வாகக் குழுவுக்கும் அந்தக் குடும்பத்தினருக்கும் இடையிலான நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துவிட்டன. இப்போது புதுவை இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளின் கீழ் அந்தக் கோயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கோயில் மற்றும் அதன் நிலங்கள் புதுவை மாநில எல்லைக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
 அதேபோல, ஆந்திர மாநிலம் - ஏனாம் எல்லைப் பகுதியிலும் சில பிரச்னைகள் உள்ளன. இவை ஐம்பது ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் வலியுறுத்தினேன். புதுவையைச் சுற்றியுள்ள மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 - பீ. ஜெபலின் ஜான்
 படங்கள்: கே. ரமேஷ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT