சாயக்கழிவு கலப்பு: விவசாயத்துக்குப் பயனிலா நொய்யலாற்று நீர்

தொடர்ந்து வரும் திருப்பூர் சாயக்கழிவால் கடந்த 22 ஆண்டுகளாக நொய்யல் ஆற்று நீரைப் பயன்படுத்த முடியாமல் கரூர் மாவட்ட பாசன விவசாயிகள் திணறி வருகிறார்கள்.
சாயக்கழிவு கலப்பு: விவசாயத்துக்குப் பயனிலா நொய்யலாற்று நீர்

கரூர்: தொடர்ந்து வரும் திருப்பூர் சாயக்கழிவால் கடந்த 22 ஆண்டுகளாக நொய்யல் ஆற்று நீரைப் பயன்படுத்த முடியாமல் கரூர் மாவட்ட பாசன விவசாயிகள் திணறி வருகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காதா என அவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
 கோவை மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என 180 கி.மீ. பயணித்து, கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.
 தெளிந்த நீரோடையாகச் சென்ற நொய்யல் ஆற்றுப் பாசனத்தில் விளையும் கரும்பு, நெல், வாழை, மஞ்சள் பயிர்கள் தமிழகத்தில் மிகவும் பெயர் பெற்று விளங்கின. நாளடைவில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடைத் தொழிலின் வளரத் தொடங்கி, அங்கு நாளுக்கு நாள் சாய மற்றும் சலவை ஆலைகளின் பெருக்கத்தால் நொய்யல் ஆறு மாசடையத் தொடங்கியது.
 திருப்பூர் மாவட்டத்தில் ஆடைகளுக்கு சாயமேற்றும் சலவை, சாய ஆலைகள் சுத்திகரிப்படாத கழிவுகளை ஆற்றில் நேரடியாக விட்டதன் விளைவால் ஆற்றின் நீரோட்டம் சென்ற இடங்கள் அனைத்தும் மாசடையத் தொடங்கின.
 சாயக் கழிவுகள் இன்றளவும் தொடர்ந்து ஆற்றில் விடப்படுவதால், திருப்பூர் மாவட்ட விவசாயிகளைத் தவிர, ஆற்று நீர் மூலம் அதிக அளவு பாசன வசதி பெறும் கரூர் மாவட்ட விவசாயிகளும் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தங்களது நிலங்களுக்குப் பயன்படுத்த முடியாமலும் அந்நதி நீரைப் பருக முடியாமலும் உள்ளனர்.
 இதுதொடர்பாக நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி கூறியது:
 நொய்யல் ஆறு திருப்பூரைக் கடந்து கரூர் மாவட்டத்தின் எல்லையான அரவக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட அஞ்சூர் கார்வழி கிராமத்தில் நுழைகிறது. பின்னர் இந்த ஆறு துக்காச்சி, அப்பிப்பாளையம், வேட்டமங்கலம், கோம்புபாளையம் கடந்து காவிரியுடன் இணைகிறது. இந்தப் பகுதியில் ஆற்றங்கரையோரம் சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு 15,000 ஏக்கர் நிலம், கார்வழி ஆத்துப்பாளையத்தில் உள்ள அணையிலிருந்து வாய்க்காலாக தென்னிலை கீழ்பாகம், மேல்பாகம், குப்பாம், அத்திப்பாளையம், ஆத்தூர் வழியாக பஞ்சமாதேவி வரை சென்று சுமார் 20,000 ஏக்கர் நிலம் என சுமார் 35,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. வாழை, நெல், மஞ்சள், கரும்பு அதிக அளவு பயிரிடப்பட்டது.
 நாளடைவில் திருப்பூர் சாயக்கழிவால் 1996 முதல் விவசாய நிலங்கள் உப்புத் தன்மையடையத் தொடங்கின. ஆற்றில் சாயக்கழிவுகளை நேரடியாகவே கலக்க விட்டதால் 1500 டிடிஎஸ் (உப்புத்தன்மை) 2500 டிடிஎஸ் வரை வரத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் 1998-இல் தொடர்ந்த வழக்கில் திருப்பூர் சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க விடக் கூடாது என 1999-இல் தடையாணை பெறப்பட்டது.
 இருப்பினும், இன்றைக்கும் ஆற்றில் 1200 டிடிஎஸ் வரை சாயம் கலந்துதான் செல்கிறது. இதனால் நொய்யல் நதி நீரை பயன்படுத்தி வந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 22 ஆண்டுகளாக நதி நீரை குடிக்கவோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த இயலவில்லை.
 இன்றளவும் கிணறுகளில் தண்ணீர் கருஞ்சிவப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தேங்கிக் கிடக்கிறது. தற்போது குடிநீருக்காக மறவாபாளையத்தில் காவிரி ஆற்றில் போடப்பட்டிருக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தைப் பயன்படுத்தித்தான் குடிநீர் பருகுகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பசுமைத் தீர்ப்பாயம் உடனே வழக்கை விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என நீதிமன்ற கடந்தாண்டு உத்தரவிட்டது.
 ஆனாலும் இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டதால் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளோம். தீர்ப்புக்குப் பின்னராவது திருப்பூர் சாய, சலவை ஆலைகள் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தினால்தான் ஆற்றில் சாயக்கழிவு கலப்பது தடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையேல் கரூர் மாவட்டத்தில் நொய்யல் நதியை எதற்கும் பயன்படுத்தாத நிலை தொடரும் என்றார்.
 - அ. அருள்ராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com