திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி: முதல்வர் பழனிசாமி தாக்கு

இலங்கை போரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்கிழமை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி: முதல்வர் பழனிசாமி தாக்கு

இலங்கை போரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்கிழமை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சேலத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 

திமுக ஆட்சிக்காலத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சியில் குற்றம் கண்டுபிடிக்க ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறார். பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது. அதிமுக ஆட்சியில் சட்டவிதிகளின்படி டெண்டர்கள் விடப்படுகின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். 

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். உழைக்கப் பிறந்தவர்கள் அதிமுகவினர், மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்கள் அல்ல. உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவியில் இருக்கிறேன். அதிமுக ஜனநாயக கட்சி, அதிமுகவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் உயர் பதவிக்கு வர முடியும். உழைக்கின்றவர்களை மதிக்கும் இயக்கம் அதிமுக மட்டும் தான். 

அதிமுகவை உடைக்க முயன்ற ஸ்டாலினால் ஒரு தொண்டனையாவது இழுக்க முடிந்ததா? எப்போதும் முதல்வர் கனவில் உள்ளவர் ஸ்டாலின். ஸ்டாலின் கனவு தான் காண முடியும், முதல்வராக முடியாது.

இலங்கையில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் துயரங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். ஈழத் தமிழர் படுகொலைக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி தான். திமுக, காங்கிரஸை போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும். மத்திய அரசு மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கவே இந்த கண்டன கூட்டம் நடைபெறுகிறது. 

கருணாநிதியைத் தொடர்ந்து ஸ்டாலின், தற்போது அவரைத் தொர்ந்து உதயநிதி ஆகியோர் வந்துவிட்டனர். ஏனெனில் திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. தந்தையின் போர்வையில் திமுகவின் தலைவரானவர் ஸ்டாலின். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது. 

திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமை செயலக கட்டடம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டதில், முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது. திமுக ஆட்சியில் ஒரே நபருக்கு 10 ஒப்பந்தங்கள் வரை கொடுத்துள்ளனர். மத்திய பாஜக அரசுடன் கூட்டணியாக இல்லை. இணக்கமாக மட்டுமே இருக்கிறோம். தமிழக நலனுக்காக மத்திய அரசை ஆதரிக்கிறோம். நலனுக்கு எதிராக இருந்தால் எதிர்ப்போம் என்று காட்டமாகப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com