புழல் உள்பட 6 சிறைகளில் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

புழல் உள்பட 6 சிறைகளின் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


புழல் உள்பட 6 சிறைகளின் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விவரம்:
புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசு வாழ்க்கைக்கு வசதிகள் செய்துக் கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது. 
இச்செய்தியின் விளைவாக கடந்த 14, 15 தேதிகளில் புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனைகளில், 20 டி.வி.கள், மிக்ஸி, பழச்சாறு பிழியும் கருவி, சமையல் பாத்திரங்கள், பீடி, வெளிநாட்டு சிகரெட், திரைச்சீலைகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர், சேலம், கடலூர், பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் காவல்துறையினரும், சிறைத்துறையினரும் இணைந்து கடந்த 16-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தி, பீடி,சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும் புழல் மத்திய சிறையில் இருந்து 17 சிறைக் காவலர்கள் வேறு சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே கடந்த 19-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், இந்து இயக்கத் தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் அறைகளில் இருந்து 2 டி.வி.க்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் 20-ஆம் தேதியும் விசாரணை கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறையில் சோதனை நடத்தப்பட்டது.
கண்காணிப்பாளர்கள் மாற்றம்: இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சிறைகளில் 6 கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி திங்கள்கிழமை உத்தரவிட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பாளர்கள் விவரம் (பழைய பதவி அடைப்புக்குள்):
வி.ருக்மணி பிரியதர்ஷிணி - புதுக்கோட்டை சிறார் கூர்நோக்கு இல்லம் மற்றும் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் (புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தண்டனைச் சிறை).
எம்.செந்தில்குமார்-புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தண்டனைச் சிறைக் கண்காணிப்பாளர் (கோயம்புத்தூர் மத்திய சிறை). 
எம்.ஆண்டாள்-வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (சேலம் மத்திய சிறை).
ஜி.நிஜிலா நாகேந்திரன்-கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (திருச்சிராப்பள்ளி மத்திய சிறை).
சி.முருகேசன்- திருச்சிராப்பள்ளி மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர்).
ஆர்.கிருஷ்ணராஜ்-கோயம்புத்தூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (கோயம்புத்தூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர்) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் முருகேசனும், கிருஷ்ணராஜும் கூடுதல் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புழல் சிறைக் கண்காணிப்பாளராக இருந்த ருக்மணி பிரியதர்ஷிணி, புதுக்கோட்டை சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
6 கண்காணிப்பாளர்கள் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது, சிறைத்துறையினரிடம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதேவேளையில் சிறைத்துறையில் உள்ள மேலும் சில உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com