விரைவில் 350 புதிய பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டம்

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களின் சேவையை மேம்படுத்தும் வகையில் மேலும் 350 புதிய பேருந்துகளை அடுத்த வாரத்தில் இயக்க
விரைவில் 350 புதிய பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டம்


தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களின் சேவையை மேம்படுத்தும் வகையில் மேலும் 350 புதிய பேருந்துகளை அடுத்த வாரத்தில் இயக்க உள்ளதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் அனைத்தும் காலாவதியாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந் நிலையில், புதிதாக 2,000 பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அவற்றில் முதற்கட்டமாக சுமார் ரூ.135 கோடி மதிப்பில் 515 புதிய பேருந்துகளை கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்இடிசி-க்கு படுக்கை, குளிர்சாதன வசதியுடன் கூடிய 40 பேருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் பிற கழகங்களான விழுப்புரம் - 60, சேலம் -78, கோயம்புத்தூர்- 172, கும்பகோணம் - 64, மதுரை - 32, திருநெல்வேலி 69 பேருந்துகள் வழங்கப்பட்டன. இதையடுத்து 2-ஆம் கட்டமாக மேலும் 500 புதிய பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கெனவே கூறியிருந்தார். அதில் 300 முதல் 350 புதிய பேருந்துகளின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர தயார் நிலையில் இருப்பதாக மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வார இறுதியில் முடிவு: இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியது: அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தேவையான புதிய பேருந்துகளின் வடிவமைப்பு உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 515 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 300 முதல் 350 புதிய பேருந்துகளுக்கு கூண்டுகள் கட்டப்பட்டு தயாராக உள்ளன. இந்த பேருந்துகளின் இயக்கம் குறித்து இவ்வார இறுதியில் முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அதற்கான தேதியை அவர் விரைவில் அறிவிப்பார். 
தீபாவளி பண்டிகைக்கு முன்பே அறிவிக்கப்பட்ட புதிய பேருந்துகள் அனைத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றனர் அதிகாரிகள்.
சென்னைக்கு புதிய பேருந்துகள்?: இந்நிலையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு எப்போது புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்துகளை வாங்காததால், மொத்தமுள்ள பேருந்துகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை காலாவதியாகி விட்டன. பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளின் இருக்கைகள், கண்ணாடிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. அதேபோல் பல பேருந்துகளின் தானியங்கி கதவுகளும், மேற்கூரையும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இதனிடையே மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 100 சிறிய பேருந்துகள் உள்பட மொத்தம் 345 புதிய பேருந்துகள் விரைவில் இணைக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவித்தனர். 
ஆனால் இப்பேருந்துகளின் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாததால் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்பேருந்துகளின் கட்டுமானப் பணிகளை மாநகர் போக்குவரத்துக் கழகமே மேற்கொள்வது இந்த தாமதத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com