தாமிரவருணி புஷ்கர விழா ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் கோரிக்கை

தாமிரவருணி மகா புஷ்கர விழாவுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
வேளாக்குறிச்சி ஆதீனம்
வேளாக்குறிச்சி ஆதீனம்


தாமிரவருணி மகா புஷ்கர விழாவுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரவருணி புஷ்கர விழாக் குழு தலைவரான வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் அவர் அளித்த பேட்டி: 
அக். 11 முதல் அக். 23 வரை நடைபெறவுள்ள தாமிரவருணி புஷ்கரம் விழாவுக்கு திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் தைப்பூச படித்துறையில் தடை விதித்திருப்பதை விலக்க வேண்டும். தைப்பூசப் படித்துறை 64 தீர்த்தக்கட்டங்களில் முதன்மையான, முக்கியமான பகுதியாகும். இதைத் தவிர்ப்பது புஷ்கர விழாவுக்கு நேரடியாகத் தடைவிதிப்பதற்கு ஒப்பாகும். மாவட்ட நிர்வாகம் கூறியதுபோல் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய ஆவன செய்ய வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.
2006-இல் நடைபெற்ற புஷ்கர விழாவில் நெல்லையப்பர் கோயிலிலிருந்து சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றிருக்கிறது. இதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். ஆகம விதிகளும் அதற்கு இடமளிக்கிறது. எனவே, 2006-இல் நடைபெற்றதுபோல நெல்லையப்பர் கோவிலிலிருந்து சுவாமி எழுந்தருளி தாமிரவருணியையும், அம்மன் சிலையையும், இந்திரன் சிலையையும் அங்கு கொண்டுசென்று தீர்த்தவாரி நடைபெற அறநிலையத் துறை ஒத்துழைக்க வேண்டும்.
பிற மாநிலங்களில் புஷ்கரம் நிகழ்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்கி விழாவை நடத்தி வருகிற நிலையில், தமிழகத்தில் அரசு நிதி ஒதுக்காததும், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யாததும் வருத்தமளிக்கிறது. 
தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரியமிக்க, புனிதமான ஒரு பெருவிழாவை அரசே முன்னின்று நடத்த வேண்டும் அல்லது ஆன்மிக அமைப்புகளுக்கு உறுதுணையாக இருந்து இந்த விழாவை நடத்த இனிமேலாவது உதவி புரிய வேண்டும்.
தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் சார்ந்த இந்த புஷ்கர புனித நீராடல் விழாவுக்கு இதுநாள் வரை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 18 படித்துறைகளில்கூட அடிப்படை வசதிகளோ, சுகாதார வசதிகளோ செய்யப்படவில்லை.
அவற்றை துரிதமாக செய்ய வேண்டும். புஷ்கரம் விழாவை அரசு விழாவைப் போல் நடத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com