நெல்லையில் தடைவிதித்த 2 இடங்களில் மஹா புஷ்கரம்?: ஆட்சியர் மறுபரிசீலனை

தாமிரவருணி நதியில் குறுக்குத் துறை, தைப்பூச மண்டபம் ஆகிய இடங்களில் மஹா புஷ்கரம் நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா


தாமிரவருணி நதியில் குறுக்குத் துறை, தைப்பூச மண்டபம் ஆகிய இடங்களில் மஹா புஷ்கரம் நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
தாமிரவருணி மஹா புஷ்கர விழா வரும் அக்டோபர் 12 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், சமீபத்தில் குறுக்குத்துறை மற்றும் தைப்பூச மண்டப படித்துறைகளில் புஷ்கர விழா நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தடை விதித்தார். 
அதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த நிலையில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தாமிரவருணி நதியில் அக்டோபர் 12 முதல் 23 வரை 18 இடங்களில் மஹா புஷ்கரம் நடத்த பல்வேறு ஆன்மிக அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால், தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதன் காரணமாக, திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படித்துறை மற்றும் பிள்ளையன் கட்டளைக்குச் சொந்தமான தைப்பூச மண்டப படித்துறை ஆகியவற்றில் புஷ்கர விழா நடத்த அனுமதியளிக்கப்படவில்லை. அந்த இரண்டு இடங்களிலும் புஷ்கர விழா நடத்த அனுமதி வேண்டி விழா குழுவினர் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருடன் கலந்தாலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள தாமிரவருணி புஷ்கரத்தின் போது தாமிரவருணி ஆற்றுப் படித் துறைகளில் நீராட அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாதேவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வரும் அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி ஆற்றில் புஷ்கரத்திரு விழா நடைபெற உள்ளது. 
இந்த புஷ்கரத்தின்போது திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத் துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்து அறநிலையத் துறையும், மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளனர். இந்தத் தடையை நீக்கி தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத் துறையில் புனித நீராட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக, தமிழக இந்துசமய அறநிலையத் துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வரும் அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com