80-ஆவது வயதில் முதன்முதலாக வாக்களித்த முதியவர்

வந்தவாசி அருகே மருதநாடு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் முதன் முதலாக தனது வாக்கை ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தலில் பதிவு செய்தார்.
80-ஆவது வயதில் முதன்முதலாக வாக்களித்த முதியவர்

வந்தவாசி அருகே மருதநாடு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் முதன் முதலாக தனது வாக்கை ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தலில் பதிவு செய்தார்.
 வந்தவாசியை அடுத்த மருதாடு ராஜீவ் காந்தி நகர் இருளர் தெருவைச் சேர்ந்த கன்னியப்பன்(80), இவரது மகள் கருப்பாயி(48), கருப்பாயியின் மகன்கள் பாபு(32), பிரபு(30), பாபுவின் மனைவி காமாட்சி(23), பிரபுவின் மனைவி ராதிகா(21), ராதிகாவின் தந்தை ராஜேந்திரன்(50) ஆகிய 7 பேரும் வீரம்பாக்கம்புதூரில் கொத்தடிமைகளாக இருந்தபோது கடந்த 2017-ஆம் ஆண்டு வருவாய்த் துறையினரால் மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இவர்கள் 7 பேருக்கும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வருவாய்த்துறையினர் பெற்றுத் தந்தனர்.
 இந்த நிலையில், கன்னியப்பன் உள்ளிட்ட இந்த 7 பேரும் இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களித்ததில்லை என்ற தகவல் தெரியவந்ததை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கடந்த திங்கள்கிழமை மருதாடு கிராமத்துக்கு சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து அவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தார்.
 இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை கன்னியப்பன் உள்ளிட்ட 7 பேரையும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் மருதாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு வருவாய்த் துறையினர் அழைத்து வந்தனர். அங்கு காத்திருந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி 7 பேருக்கும் இனிப்பு வழங்கி வரவேற்றார்.
 பின்னர், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து 7 பேரும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் வாக்கை பதிவு செய்தனர். பின்னர் 7 பேரும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு நன்றி தெரிவித்துவிட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
 அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு
 ஆரணி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட வந்தவாசி சட்டப்பேரவை தொகுதி வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடைபெற்றது.
 இதற்கென வந்தவாசி பகுதியில் 280 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
 இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி வரை 15 சதவீத வாக்குகளும், மதியம் ஒரு மணிவரை சுமார் 50 சதவீத வாக்குகளும் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு மந்தமடைந்தது.
 மேலும் வந்தவாசி, செட்டிக்குளம், எரமலூர், ஓசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மேலும் சு.காட்டேரி கிராம வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல், இடம் பெயர்ந்தோர் பட்டியல் ஆகிய இரண்டிலும் சிலரது பெயர் இருந்ததால் அவர்களை வாக்களிக்க வாக்குச்சாவடி அலுவலர் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த வாக்குச் சாவடியில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிக்கு சென்ற உதவி தேர்தல் அலுவலர் லாவண்யா, வட்டாட்சியர் அரிக்குமார் உள்ளிட்டோர் வாக்காளர்களை சமரசம் செய்து அவர்களை வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com