தமிழகத்தில் 71% வாக்குப்பதிவு: இயந்திரங்கள் பழுதால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது. ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக
தமிழகத்தில் 71% வாக்குப்பதிவு: இயந்திரங்கள் பழுதால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது. ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்காளர்கள் சில மணி நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், ஆங்காங்கே சிறிய அளவில் மோதல்கள் நடந்தாலும் சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் வேலூரைத் தவிர்த்து 38 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக, வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை பரிசோதிக்க மாதிரி வாக்குப் பதிவுகள் நடத்தப்பட்டன.
காலையிலேயே குவிந்த வாக்காளர்கள்: வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கினாலும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் காலை 6.30 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். 
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். பல வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் என தனி வரிசைகள் ஏற்படுத்தப்படாத காரணத்தால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இயந்திரங்களில் குளறுபடி: வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்தன. சென்னை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அல்லது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட்டன.
காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதல் நிறைவடையும் வரையில், 375 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், 776 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களிலும், 228 கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும் பழுது ஏற்பட்டதாகவும், அவை உடனடியாக மாற்றப்பட்டதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இயந்திரங்களின் பழுது காரணமாக, வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நிலவரம்: காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளிவரத் தொடங்கின. 
காலை 11 மணிக்கு ஆரணி மக்களவைத் தொகுதியிலும், 1 மணிக்கு நாமக்கல் தொகுதியிலும், மாலை 3 மணிக்கு கரூரிலும், மாலை 5 மணியளவில் சிதம்பரத்திலும் அதிக வாக்குகள் பதிவாகியிருந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதேபோன்று, பிற்பகல் 3 மணி வரை மத்திய சென்னையில் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணியளவில் மாநிலத்திலேயே கன்னியாகுமரி தொகுதியில்தான் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு நிறைவடைந்த மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளின் சதவீதம் 69.55 சதவீதமாக இருந்தது என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
6 மணிக்கு மேல் டோக்கன்: வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அப்போது, வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு இறங்கு வரிசை அடிப்படையில் டோக்கன்கள் அளிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் சித்திரைத் திருவிழா காரணமாக, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
பெயர் இல்லாததால் குழப்பம்: வாக்களிக்க ஆவணச் சான்றாக 11 அடையாள ஆவணங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற புகார் எழுந்தது. சென்னை, கன்னியாகுமரி போன்ற சில மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, விளக்கமளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போதே வாக்காளர்கள் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றார்.
சில இடங்களில் மோதல் சம்பவங்கள்: மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தலை ஒட்டி, ஆங்காங்கே சில இடங்களில் மோதல் சம்பவங்கள் நடந்தன. அவை வாக்குச் சாவடிகளுக்கு வெளியே நடைபெற்றதால் வாக்குப் பதிவை பாதிக்கவில்லை என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு: கன்னியாகுமரியில் பாஜக-அமமுக இடையே நடந்த மோதலில் பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டனர். ஆற்காடு கீழ்விஷாரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் வானத்தை நோக்கிச் சுட்டனர். அதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு, சில இடங்களில் சிறு சிறு பிரச்னைகள் இருந்த போதிலும் எங்கும் சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து காவல்துறைத் இயக்குநர் (தேர்தல்) உள்ளிட்ட அதிகாரிகளுடன்  பேசி வருகிறேன் என்றார்.
புதுச்சேரியில்...  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில்  81.48 சதவீத வாக்குகள் பதிவாகின.  தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் 77.66 சதவீத 
வாக்குகள் பதிவாகின.

18 பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு 71.62%
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 18 சட்டப் பேரவைத் தொகுதிகளில்  விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, 18 தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்குப் பதிவு சதவீதத்தின் அளவு 71.62 சதவீதமாக இருந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.  வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நிலவரம் 
(மாலை 6 மணி நிலவரம்)
பூந்தமல்லி    79.14
பெரம்பூர்    61.06
திருப்போரூர்    81.05
சோளிங்கர்    79.63
குடியாத்தம்    81.79
ஆம்பூர்    76.35
ஒசூர்    71.29
பாப்பிரெட்டிபட்டி    83.31
அரூர்    86.96
நிலக்கோட்டை    85.50
திருவாரூர்    77.38
தஞ்சாவூர்    66.10
மானாமதுரை    71.22
ஆண்டிப்பட்டி    75.19
பெரியகுளம்    64.89
சாத்தூர்    60.87
 பரமக்குடி    71.69
விளாத்திகுளம்    78.06

சென்னை அண்ணாநகர் வள்ளியம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் முன்பு நீண்ட வரிசையில் வியாழக்கிழமை காத்திருந்த வாக்காளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com