வேளாண்மைத் துறைக்கு ரூ.10,551 கோடி

வேளாண்துறைக்கு நிதி நிலை அறிக்கையில் 2019-2020-ஆம் ஆண்டுக்கு ரூ.10,551 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில்
வேளாண்மைத் துறைக்கு ரூ.10,551 கோடி


வேளாண்துறைக்கு நிதி நிலை அறிக்கையில் 2019-2020-ஆம் ஆண்டுக்கு ரூ.10,551 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் ரூ.100 கோடியில் 2 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
அதன் விவரம்: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துக்காக ரூ.300 கோடி, நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்துக்காக ரூ.87.22 கோடி உள்பட வேளாண்மைத் துறைக்கு ரூ.10,551 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீடு: 2019-20-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பயிர்களையும், பகுதிகளையும் சேர்க்க அரசு அறிவிக்கை செய்ய உள்ளது.
குறிப்பிட்ட பகுதிக்குள் ஏற்படும் இடர்பாடுகளான ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளோடு இடிமின்னலுடன் கூடிய திடீர் மழை மற்றும் இயற்கை தீயினால் ஏற்படும் பாதிப்புகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும்.  இந்தத் திட்டத்துக்கான காப்பீட்டுக் கட்டணத்தில் மாநில அரசின் பங்குத் தொகைக்காக ரூ.622 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பம்பு செட்டுகள் வழங்கல்: 2019-20-ஆம் ஆண்டில் ரூ.1,361 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும். சூரிய சக்தியால் இயங்கும் பம்பு-செட்டுகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு 90 சதவீதம் மானியம் அளிக்கிறது. 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 84.09 கோடி மானிய உதவியுடன் 10 குதிரை திறன் வரை உள்ள சூரிய சக்தியால் இயங்கும் 2 ஆயிரம் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
உழவர் உற்பத்தியாளர் குழு: நடப்பாண்டில் ரூ.100.42  கோடி நிதி ஒதுக்கீட்டில் 2 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் அமைக்கப்படும்.
உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் நிலைத்துச் செயல்பட அவற்றை ஒருங்கிணைப்பது அவசியத் தேவையாக உள்ளது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மாநில அளவிலும், மண்டல அளவிலும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. 
இந்த அமைப்புகளுக்கு ஊக்கமளிக்க தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 
வரும் நிதியாண்டில் 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களையும், 360 கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை நிறுவவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.172.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழச் சாகுபடி திட்டம்: பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் முதல்வரின் சிறப்புத் திட்டம் ஒன்று நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் தோட்டக்கலை பண்ணைகளின் மூலம் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து வில்லை ஒட்டி காய்கறி விதைகளை உற்பத்தி செய்து, தேவைப்படும் இடங்களில் போதிய அளவு விநியோகிக்கப்படும். 
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்றுமதி ஊக்குவிப்பு: வேளாண் பொருள்களின்  ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்துள்ளதால் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்கத்தில் ஒரு சிறப்பு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அலகினை அரசு ஏற்படுத்தும்.
இயற்கை வேளாண்மை மற்றும் பிற தரச் சான்றிதழ் அளித்தல், விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற அனைத்து ஏற்றுமதி சம்பந்தமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்த மையம் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்.  
இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.  வேளாண் கல்லூரிகள் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக ரூ.80 கோடி செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com