தமிழ்நாடு

பிரச்னைக்கு தீர்வு காணும் எண்ணம் உங்களுக்கு இல்லை: ஆளுநருக்கு முதல்வர் நாராயணசாமி பதில் 

DIN


உங்களுடைய கடிதம் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் உங்களுக்கு இல்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு பதில் தெரிவித்துள்ளார். 

புதுவை மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று அவருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி கடந்த 13-ஆம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் கிரண் பேடிக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

எனினும், ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் இல்லாத காரணத்தில் இந்த போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 5-ஆவது நாளாக நீடித்து வருகிறது. 

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய அடுத்த தினமே தில்லிக்குச் சென்ற ஆளுநர் கிரண் பேடி இன்று புதுவைக்கு திரும்பினார். அவர் வரும் 21-ஆம் தேதி தான் புதுவைக்கு வருவதாக இருந்தது. எனினும், முதல்வர் நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் இன்று புதுவைக்கு திரும்பினார். 

இதையடுத்து, மாலை 6 மணிக்கு முதல்வர் நாராயணசாமியை சந்திப்பதற்கும் அவர் நேரம் ஒதுக்கினார். இதற்கு சம்மதம் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி 39 கோப்புகள் தொடர்பாக விவாதிக்கபடவேண்டும் என்பதால், இந்த சந்திப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெறவேண்டும். மேலும், சந்திப்பின் போது குறிப்பிட்ட துறை செயலர்கள், தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோரும் உடனிருக்க வேண்டும், அப்போது தான் இந்த விஷயத்தில் தீர்வு எட்டப்படும் என்று நிபந்தனைகளை வைத்தார். 

அதன்பிறகு, மாலை 6 மணி ஆகியும் இருவரது சந்திப்பு நிகழவில்லை. இந்நிலையில், முதல்வர் நாராயணசாமியின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஆளுநர் கிரண் பேடி கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தில் கிரண் பேடி, "நான் அழைத்த நேரத்துக்கு நீங்கள் வரவில்லை. நீங்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்க இயலாது. அதனால், எந்த இடத்தில் சந்தித்து விவாதத்தை வைத்துக்கொள்ளலாம், அதற்கான தேதியும் நேரத்தையும் தெரிவியுங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.   

இந்நிலையில், புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசி அவர், 

"துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் இருந்து இரவு 7.10-க்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை படித்த போது கிரண் பேடியின் ஆணவம் அதில் அதிகமாக தெரிந்தது. எந்த இடத்தில் பேசுவது, யாரை அழைத்து பேசுவது, யாரை அழைக்கக் கூடாது என்பதை முடிவு செய்வது நான் தான் என்று அதில் கூறியிருந்தார். 

அது உண்மை தான். துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும், யாரை அழைக்க வேண்டும் என்று சொல்லுவதற்கு உரிமை உள்ளது.

ஆனால், இந்திய சிறப்பு சட்டத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட எனக்கும் அமைச்சர்களுக்கும் எந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும் யாரை அழைக்க வேண்டும் என்று சொல்லுகிற உரிமை எங்களுக்கும் உள்ளது. அவருக்கு இருக்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது. 

அதுமட்டுமில்லாது அந்த கடிதத்தில் துணை நிலை ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது என்று பொய்யான தகவலை குறிப்பிட்டிருக்கிறார்.

பிற்பகல் 2.30 மணியளவில் அவர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தார். அவருடைய வாகனம் எந்தவித இடையூறும் இன்றி உள்ளே நுழைந்தது. தலைமைச் செயலாளர், செயலாளர்கள் அவர்களும் எந்தவித தொந்தரவும் இல்லாமல் உள்ளே சென்றார்கள். 

நானும், அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும் இங்கு அறவழியில் போராடிக்கொண்டிருக்கிறோம். எந்தவிதமான கலவரத்துக்கும் இடம்கொடுக்கக்கூடாது என்று நாங்கள் உத்தரவிட்டிருக்கிறோம்.  அதனால் தொண்டர்கள் அங்கே தலைமைத் தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நாங்கள் இங்கே அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறோம். 
ஆனால், அவர் முற்றுகையிடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். அவர் கொண்டு வந்த ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு முற்றுகையிட்டிருக்கிறார்கள். புதுவையைச் சேர்ந்த யாரும் முற்றுகையிடவில்லை. அதுமட்டுமல்ல, அவர் ஆளுநர் மாளிகைக்குள் சுதந்திரமாக சைக்கிள் பயணம் செய்கிறார். அதற்கும் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது. 

அவர் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத ஆதாரம் திரட்டுவதற்காக இப்படி சொல்கிறார். 

எங்களுடைய பதிலில், 

'நாங்கள் உங்களோடு அமர்ந்து பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு முடிவு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்ல துறையின் தலைவர்கள் இருந்தால், தலைமைச் செயலாளர் செயலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண சுலபமாக இருக்கும். 

நீங்கள் எந்த இடத்தில் எந்த தேதியில் எந்த நேரத்தில் வந்து கலந்துகொள்ள கூறினாலும் நாங்கள் கலந்துகொள்ள தயாராக உள்ளோம். எந்த காலத்திலும், நாங்கள் உங்களை சந்திக்க மாட்டோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு எண்ணமில்லை. 

ஆனால், உங்களுடைய கடிதத்தின் மூலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்று கூறியிருக்கிறேன்' " என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT