பேச்சுவார்த்தைக்காக முதல்வர் நாராயணசாமி விதித்த நிபந்தனையை ஏற்கமுடியாது: ஆளுநர் கிரண் பேடி 

பேச்சுவார்த்தைக்காக புதுவை முதல்வர் நாராயணசாமி விதித்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். 
பேச்சுவார்த்தைக்காக முதல்வர் நாராயணசாமி விதித்த நிபந்தனையை ஏற்கமுடியாது: ஆளுநர் கிரண் பேடி 


பேச்சுவார்த்தைக்காக புதுவை முதல்வர் நாராயணசாமி விதித்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். 

புதுவை மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று அவருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி கடந்த 13-ஆம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் கிரண் பேடிக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

எனினும், ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் இல்லாத காரணத்தில் இந்த போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 5-ஆவது நாளாக நீடித்து வருகிறது. 

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய அடுத்த தினமே தில்லிக்குச் சென்ற ஆளுநர் கிரண் பேடி இன்று புதுவைக்கு திரும்பினார். அவர் வரும் 21-ஆம் தேதி தான் புதுவைக்கு வருவதாக இருந்தது. எனினும், முதல்வர் நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் இன்று புதுவைக்கு திரும்பினார். இதையடுத்து, மாலை 6 மணிக்கு முதல்வர் நாராயணசாமியை சந்திப்பதற்கும் அவர் நேரம் ஒதுக்கினார்.  

இதற்கு சம்மதம் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி 39 கோப்புகள் தொடர்பாக விவாதிக்கபடவேண்டும் என்பதால், இந்த சந்திப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெறவேண்டும். மேலும், சந்திப்பின் போது குறிப்பிட்ட துறை செயலர்கள், தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோரும் உடனிருக்க வேண்டும், அப்போது தான் இந்த விஷயத்தில் தீர்வு எட்டப்படும் என்று நிபந்தனைகளை வைத்தார். 

ஆனால், மாலை 6 மணி ஆகியும் இருவரது சந்திப்பு நிகழவில்லை. இந்நிலையில், முதல்வர் நாராயணசாமியின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கிரண் பேடி மேலும் தனது கடிதத்தில், "நான் அழைத்த நேரத்துக்கு நீங்கள் வரவில்லை. நீங்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்க இயலாது. அதனால், எந்த இடத்தில் சந்தித்து விவாதத்தை வைத்துக்கொள்ளலாம், அதற்கான தேதியும் நேரத்தையும் தெரிவியுங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

இதன்மூலம், முதல்வர், ஆளுநர் இடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com