திறக்கப்படாத சலவைத் தொழிலாளர்கள் குடியிருப்பு

திருவொற்றியூரில் சலவைத் தொழிலாளர்களுக்காக ரூ.10.21 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் முடிந்து
திறக்கப்படாத சலவைத் தொழிலாளர்கள் குடியிருப்பு

திருவொற்றியூரில் சலவைத் தொழிலாளர்களுக்காக ரூ.10.21 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் முடிந்து கடந்த ஆறு மாதங்களாகியும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

 சென்னையை ஒட்டி அமைந்திருந்த கிராமங்களின் ஒன்றான திருவொற்றியூர் காலடிபேட்டையில் 1946-ல் டோபிகானா உருவானது. இதே பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சலவையாளர்கள் இங்கு சலவைத் தொழில் செய்து வந்தனர். மேலும் இவர்கள் இதே பகுதியில் தனித்தனியே குடிசைகளை அமைத்திருந்தனர்.

 தற்போது சுமார் 128 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் இருந்து வருகின்றன. சலவைத் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையை அடுத்து இவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு 1998-ம் ஆண்டு திருவொற்றியூர் நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இருப்பினும் நில உரிமை மாற்றம், ஒரு பிரிவினருக்கான குடியிருப்பு, திட்ட வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 18 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இத்திட்டம் தமிழக அரசு ஒப்புதலுடன் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் ரூ.10.21 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி கடந்த ஆகஸ்ட், 2016-ம் ஆண்டு தொடங்கியது.

 அடிப்படை வசதி இணைப்பு பெறுவதில் தாமதம்: இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே கட்டடப் பணிகள் முடிந்து பூச்சு வேலைகளும் முடிந்து விட்டன. வண்ணப்பூச்சும் முடிந்துவிட்டது. ஆனாலும் மின்சார இணைப்பு, கழிவு நீர் மற்றும் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. இதனால் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 கழிவு நீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்காக செலுத்த வேண்டிய ரூ. 2.15 கோடி நிலுவைத் தொகையை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியத்திற்குச் செலுத்தாததால் இணைப்பு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

 இதேபோல்தான் மின்வாரியத்திற்கும் வைப்புத் தொகையைச் செலுத்தாததால் கட்டடப் பணிகள் நிறைவடைந்தும் மின்னிணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. இவற்றைச் செலுத்த வேண்டிய குடிசை மாற்று வாரியம் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத் தொகை 75 சதவீதம் பாக்கி இருப்பதால் தாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

 இதனாலேயே வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களைக் கடந்தும் சலவைத் தொழிலாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்காமல் குடிசை மாற்று வாரியம் தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: இது குறித்து சலவைத் தொழிலாளர் சங்கத் தலைவர் மாசிலாமணி கூறியது: சென்னையிலுள்ள டோபிகானாகளில் மிகவும் பழமையானது திருவொற்றியூர் டோபிகானா.

 இங்குதான் நாங்கள் தொடர்ந்து சலவைத்தொழில் செய்து வருகிறோம். ஆனால் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கேட்டு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்த நிலையில் இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன்புதான் வீடுகள் கட்டும்பணியை குடிசை மாற்று வாரியம் தொடங்கியது.

 பொதுவாக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் வீடுகள் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் தவணைத் தொகையைச் செலுத்த வேண்டும். ஆனால் எங்களுக்குக் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்க தலா ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறுகின்றனர்.

 இதனால் இத்தொகையை சலவைத் தொழிலாளர்களால் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ. 25 ஆயிரம் குடிசை மாற்று வாரியத்திடம் செலுத்திவிட்டோம். மீதித் தொகை தலா ரூ. 75 ஆயிரத்தை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 யாரிடமும் மொத்தமாகப் பணம் இல்லாததால் ஒவ்வொரு வங்கியாக கடன் கேட்டு வருகிறோம். ஆனால் சலவைத் தொழிலாளர்களை நம்பி கடன் தர வங்கிகள் மறுத்துவிட்டன. இந்நிலையில் இத்தொகையைச் செலுத்தினால் மட்டுமே அடிப்படை வசதிகள் இணைப்புகளை பெற முடியும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே 128 பேருக்கும் ஏதாவது கூட்டுறவு வங்கியிலாவது கடன் ஏற்பாடு செய்து வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்றார் மாசிலாமணி.

 பணம் செலுத்தினால் மட்டுமே தீர்வு: இது குறித்து குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் இளம்பரிதி கூறியது: குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகள் ஒப்படைக்கப்பட்டு அரசு மானியம் போக மீதம் உள்ள தொகையை நீண்ட காலத் தவணைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் செலுத்துவது வழக்கம். ஆனால் இவ்வீடுகள் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின்கீழ் கட்டப்படுகிறது. இதில் 75 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் மானியமாகத் தருகின்றன.

 மீதம் உள்ள 25 சதவீதத்தை பயனாளிகள் கட்டாயம் செலுத்த வேண்டும். மற்றபடி சலவைத் தொழிலாளர்களுக்கு கடன் வாங்கித் தருவதெல்லாம் எங்கள் வேலை இல்லை. பாக்கித் தொகையைச் செலுத்தினால் மட்டுமே குடிநீர் மற்றும் கழிவு நீர், மின்சாரம் இணைப்புகளுக்கான வேலைகள் தொடங்கும். மேலும் இதே பகுதியில் மேலும் 32 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதனாலேயும் வீடுகளை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார் இளம்பரிதி.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com