மெட்ரோ ரயிலில் தினசரி 1 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்ததை அடுத்து, மெட்ரோ ரயிலில் சராசரியாக தினசரி பயணிப்போர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் தினசரி 1 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்ததை அடுத்து, மெட்ரோ ரயிலில் சராசரியாக தினசரி பயணிப்போர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.
 இந்த எண்ணிக்கை விரைவில் 2 லட்சமாக உயரும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஏஜி. டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை கடந்த 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் வரையிலான முதலாம் வழித்தடம், சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான இரண்டாம் வழித்தடம் என்று மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கான முதல்கட்ட ரயில் திட்டம் முழுமையடைந்தது. இதைத்தொடர்ந்து, முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கடந்த 10 -ஆம் தேதி வந்தது. அன்றைய நாள் முதல் கடந்த 13-ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் எல்லா வழித்தடத்திலும் பொதுமக்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த இலவச சேவை காரணமாக, கடந்த 10-ஆம் தேதி முதல் 13-ஆம்தேதி வரை 4 நாள்களில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 379 பேர் பயணம் செய்தனர். இதன்பிறகு, கடந்த 14-ஆம் தேதி முதல் வழக்கமான கட்டணத்துடன் மெட்ரோ ரயிலில் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் (பிப்.14) மட்டும் 86,312 பேர் பயணம் செய்தனர். இதன்பிறகு, ஒவ்வொரு நாளும் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
 முன்னதாக, 35 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்போது, தினமும் 50,000 முதல் 60,000 பேர் பயணம் செய்தனர். தற்போது, வண்ணாரப்பேட்டை வரையில் முழுமையாக நீட்டிக்கப்பட்டள்ளதால், தினசரி 85 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சம் பேர் வரையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
 இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் முடிந்தபிறகு,
 நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை செல்பவர்களுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது, சுமார் ஒரு லட்சம் பேர் இச் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, விரைவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.
 ஒருநாள் சுற்றுலா அட்டைக்கு ஏற்பாடு: சென்னை மெட்ரோ ரயில் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், ஒருநாள் சுற்றுலா அட்டை கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பயணிகள் ரூ.100 கட்டணத்துடன் சேர்ந்து ரூ.50 அட்டைக்கான பணமும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் பலமுறை பயணம் செய்யலாம்.
 சுற்றுலா அட்டை வாங்கிய நாள் முதல் 30 நாள்களுக்குள் அந்த ஒரு நாள் பயணம் இருக்க வேண்டும். பயணம் முடிந்த பிறகு, சுற்றுலா அட்டைக்கான ரூ.50 திருப்பி அளிக்கப்படும். இதுதவிர, குழுவாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் 10 சதவீதம் கட்டண சலுகையும், மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்ள டிரிப் கார்டு வாங்கி பயணம் செய்தால் 20 சதவீத கட்டண சலுகையும் பெற முடியும். சுற்றுலா அட்டை மற்றும் டிரிப் கார்டுகள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com