புதுவை ஆளுநர் வெளியிட்ட காக்கை புகைப்படத்தால் சர்ச்சை

புதுவையில் முதல்வர் வே.நாராயணசாமி தொடர் தர்னாவில் ஈடுபட்டு வரும் நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் திங்கள்கிழமை வெளியிட்ட காக்கை புகைப்படம் சர்ச்சையை
மரத்தில் காகங்கள் அமர்ந்திருப்பதை காக்கையின் யோகாசனம் என்ற வாசகத்துடன் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்ட புகைப்படம்.
மரத்தில் காகங்கள் அமர்ந்திருப்பதை காக்கையின் யோகாசனம் என்ற வாசகத்துடன் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்ட புகைப்படம்.


புதுவையில் முதல்வர் வே.நாராயணசாமி தொடர் தர்னாவில் ஈடுபட்டு வரும் நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் திங்கள்கிழமை வெளியிட்ட காக்கை புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் கிரண் பேடி தினமும் யோகாவில் ஈடுபடுவது வழக்கம். அவர், தனது கட்செவி அஞ்சல் மூலம் ஒரு புகைப்படத்தை திங்கள்கிழமை பகிர்ந்தார். மரங்களில் இரு அண்டங்காக்கைகள் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு, இதுதான் காக்கையின் யோகாசனம்  எனக் குறிப்பிட்டதுடன், தர்னா கூட ஒருவகை யோகாதான்.  இது அமர்ந்திருப்பவரின் நோக்கத்தையும்,  எந்த சக்திக்காக செய்யப்படுகிறதோ அதையும் பொறுத்தது என கருத்து தெரிவித்திருந்தார்.
 6 நாள்களாக  முதல்வர் நாராயணசாமி கருப்பு வேட்டி,  சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், காக்கை  புகைப்படத்துடன் கிரண் பேடி பதிவிட்ட கருத்து சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. 
 இது குறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:  ஒரு மாநில முதல்வர் தர்னாவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிதிவண்டியில் சவாரி செய்த ஆளுநர் கிரண் பேடியை எவ்வாறு புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. அதேபோல, முதல்வர் நாராயணசாமி தர்னாவில் ஈடுபடுவதை கொச்சைப்படுத்தும் வகையில் காக்கை யோகாசனம் என புகைப்படம் வெளியிட்டு ஆளுநர் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றார்.
 போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் கூறும்போது, மக்கள் பிரச்னைக்காக போராடி வருகிறோம். அதற்காக சிரசாசனம் கூட செய்யத் தயாராக இருக்கிறோம்.  பிரதமர் மோடி யோகா செய்ய சொல்லி ஊக்கப்படுத்துகிறார். ஆனால், ஆளுநர் கிரண் பேடியோ யோகாவை கொச்சைப்படுத்துகிறார். ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது என்றார்.
ஆளுநர் வெளியிட்ட புகைப்படம் குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது,  இதுபோன்ற கெட்ட மனநிலையில் இருப்பவரைப் பற்றி கவலையில்லை.  சமூக ஊடகங்களில் ஆளுநர் வெளியிடும் கருத்துகள், புகைப்படங்களை எப்போதும் நான் கண்டுகொள்வதில்லை. அவர் யார், அவரது மனநிலை என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.  மக்களுக்காக போராடும் எங்களை கொச்சைப்படுத்தும் ஆளுநர் கிரண் பேடியை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com