ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை


ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிற விவகாரங்கள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் முறையீடு செய்யவும் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக் குழு அமைத்து, அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 15-ஆம் உத்தரவு பிறப்பித்தது. 
அதில், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மே 28-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், அன்றைய தினத்திலிருந்து 3 வாரங்களுக்குள் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. ஜனவரி 21-ஆம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோல, ஆலையைத் திறக்க அனுமதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு கடந்த ஜனவரி 2 தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் இணைக்கப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்புடைய எழுத்துப்பூர்வ வாதங்களை பிப்ரவரி 11-ஆம் தேதி காலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன் திங்கள்கிழமை அளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
நீர்ச் சட்டத்தின் பிரிவு 22 பி, காற்றுச் சட்டத்தின் பிரிவு 31 பி ஆகியவற்றில் என்ஜிடியின் அதிகாரவரம்பு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவுகள், முடிவுகள் ஆகியவற்றை மட்டுமே என்ஜிடியில் மேல்முறையீடு செய்ய முடியும். நேரடியான உத்தரவை என்ஜிடியில் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதே, 2018, ஏப்ரல் 9-ஆம் தேதியிட்ட தமிழக அரசின் அசல் உத்தரவை என்ஜிடி ரத்து செய்துள்ளது. நீர்ச் சட்டம் 18-ஆவது பிரிவின் கீழ் மாநில அரசு பிறப்பிக்கும் அரசாணையை என்ஜிடி சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்ய முடியாது. 
ஆகையால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறோம். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2019, ஜனவரி 22-ஆம் தேதி பிறப்பித்த தொடர்ச்சியான உத்தரவையும், மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்புடைய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் ரத்து செய்கிறோம். உத்தரவுகளுக்கு எதிராக எதிர்மனுதாரர் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்.  
ஸ்டெர்லைட் ஆலை நீண்ட காலம் மூடியிருப்பதாலும், ஆலை ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள் இறக்குமதியின் முக்கியமாக இருப்பதாலும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ரிட் மனுவை விரைந்து விசாரிக்க முறையிடலாம். 
அந்த ரிட் மனு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடந்த 2018, ஏப்ரல் 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில் உள்ள தகுதிப்பாடு, மாற்று ஏற்பாடு ஆகியற்றின் அடிப்படையில் விசாரிக்கப்படும். எனவே, மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com