பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடமாக்கும் மத்திய அரசை எதிர்த்து போராடி வரும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் 

சென்னை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடமாக்கும் மத்திய அரசை எதிர்த்து போராடி வரும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே காப்பாற்றப்பட வேண்டும்; 4ஜி அலைக்கற்றை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; சேவை விரிவாக்கத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும்;  12 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதை கைவிட்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்றுபட்டு பிப்ரவரி 18 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடி அரசாங்கம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஃவோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்துவிட்டது. அதே சமயம் தனது சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது கோடிக்கணக்கான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை பழிவாங்குவது மட்டுமின்றி, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கு வழிவகுப்பதாகும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டுமென்ற நோக்கோடு, சேவை விரிவாக்கத்திற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அந்த கோரிக்கையையும் மத்திய அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அதே சமயம் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய நாட்டு வங்கிகளிடமிருந்து ரூ. 8 லட்சம் கோடி அளவிற்கு கடன் கொடுத்துள்ள மோடி அரசு, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கடன் வழங்க மறுப்பது, பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை முடமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்கும்  நோக்கமே தவிர வேறில்லை என்பது தெளிவு. மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் பலகோடி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.

மேலும் பி.என்.எஸ்.எல். ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த பின்பும் தீர்வு காண மத்திய அரசு மறுத்து வருகிறது. எனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழிவிலிருந்து பாதுகாத்திடவும், தங்களது ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராடி வருகின்றனர். இதனால் தொலைதொடர்பு வசதிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை எஸ்மா சட்டம் மற்றும் F.R 17-A என்கிற பிரிவை பயன்படுத்தி மிரட்டவும், வேலைநிறுத்தத்தை ஒடுக்கவும் முயற்சிக்கிறது மத்திய அரசு. அதை முறியடித்து 3-வது நாளாக வெற்றிகரமாக வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.

எனவே, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளை முறையாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும், ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com