மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு: ஸ்டாலின்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு: ஸ்டாலின்

சென்னை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  இடம்பெற உள்ளது. முன்னதாக செவ்வாயன்று அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக கட்சிகளுக்கான இடங்கள் குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.      

அதேசமயம் செவ்வாயன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதேபோல் ராகுலுடன் திமுக மாநிலங்களவை எம்.பியான கனிமொழி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.

திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் அமைப்புச் செயலாளரான கே.சி.வேணுகோபால் எம்.பி மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், காங்கிரஸ் தேசிய செயலருமான முகுல் வாஸ்னிக் ஆகியோர் புதனன்று சென்னை வந்திருந்தனர்.

அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி , திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் ஆலோசனை முடிந்து மாலை 7.30 மணியளவில் காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் புறப்பட்டுச் சென்றனர்.  

இந்நிலையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   

அண்ணா அறிவாலயம் வந்திருந்த காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடைபெற உள்ள 2019-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு, தமிழ்நாட்டில் ஒன்பதுஇடங்களும், புதுச்சேரியில் ஒரு இடமும் என மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நானும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் கையெழுத்திட்டுள்ளோம்.

இந்த பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் சார்பாக முகுல்  வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் மற்றும் கே.ஆர்.ராமசாமி ஆகியோரும், திமுக சார்பாக துரைமுருகன், டி.ஆர். பாலு ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துஅவர் கூறியதாவது

கூட்டணியில் இடம்பெற உள்ள பிற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்  என்பது முடிவாகும்.

ஹோட்டல் அறையொன்றில் ரகசியமாக இல்லமால் வெளிப்படையாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் எங்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுவரை எங்களுடன் மக்கள் நல செயல்பாடுகளில் கூட இருந்த எங்கள் கூட்டணி கட்சிகளுடன் நாளை பேச்சுவார்த்தை துவங்கும்.

தேமுதிகவுடன் எந்த விதமான கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அது தொடர்பான பேச்சுவார்தைகள் நடைபெறும்.

டி.ஆர்.பாலு தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிமுக கூட்டணியை மக்கள் 'பண நல கூட்டணி' என்றுதான் அழைக்கின்றனர்.  

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com