இந்திய  குடிமைப் பணித் தேர்வுகளை தமிழில் எழுத காரணமாக இருந்தவர்  காமராஜர்

 இந்திய குடிமைப் பணித் தேர்வுகளை தமிழில் எழுத காரணமாக இருந்தவர் காமராஜர் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் புகழாரம் சூட்டினார்.


 இந்திய குடிமைப் பணித் தேர்வுகளை தமிழில் எழுத காரணமாக இருந்தவர் காமராஜர் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் புகழாரம் சூட்டினார்.
   தமிழ்த்தாய் பெருவிழாவையொட்டி பெருந்தலைவர் காமராஜரின் மக்கள் பணியும் ஆளுமையும் என்ற அறக்கட்டளைச்  சொற்பொழிவு  சென்னை  தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் இந்திய அரசியலில் பெருந்தலைவர் காமராஜரின் பங்கு என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் பேசியது:   சேரர், சோழர், பாண்டியர், வேளிர், பல்லவர், இசுலாமியர், நாயக்கர் ஆட்சிகளால் பிளவுபட்டிருந்த தமிழகத்தை ஒரே குடைக்குள் கொண்டு வந்தவர் காமராஜர்.  பல்வேறு மொழிகள் பேசக்கூடிய நாட்டை மொழிவழி மாநிலமாக மாற்றினார்.  கல்வி வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றி அவர்தம் ஆட்சிக் காலத்தைப் பொற்கால ஆட்சிக் காலமாக மாற்றினார். அமெரிக்க- பிரிட்டன் நாடுகளின் அழைப்பை ஏற்காத காமராஜர், சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமே சென்றார். 1965-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கிலத்துக்கு மாற்றாக அந்தந்த மாநில மொழியே ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். குடிமைப் பணி தேர்வுகள் அவரவர் தாய்மொழியில் எழுதப்பட வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
மொத்த வருவாயில் 25 சதவீதத்தை கல்விக்கென ஒதுக்கி கல்விக்கண் திறந்தார். தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம் எனும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் கனவை நினைவாக்கினார். தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதில் காமராஜரின் பங்கு மிகப் பெரியது. அகில இந்திய காங்கிரஸில் முதன்முறையாக தமிழில் உரையாற்றி தமிழ் இனத்திற்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்தார். அவரது சிறப்புகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார் நெடுமாறன். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன், அறக்கட்டளைப் பொறுப்பாளர் ஆ.தசரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com