தமிழ்நாடு

காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு

DIN


மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
காங்கிரஸுடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக தில்லியில் இரு நாள்களுக்கு மேலாக காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர்களுடன், மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி,  திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். 
இதில், தொகுதிகளை ஒதுக்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தியும்,  மு.க.ஸ்டாலினும் தொலைபேசியில் பேச்சு நடத்தி கூட்டணி அமைக்க முடிவு செய்தனர்.
 கூட்டணி உடன்படிக்கைக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்,  தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக்,  சஞ்சய் தத் ஆகியோர்  தில்லியிலிருந்து  சென்னைக்கு புதன்கிழமை  மாலை வந்தனர். 
 சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோருடன் அகில இந்திய தலைவர்கள் ஆலோசனை  நடத்தியபின் இரவு 8  மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்தனர். மு.க.ஸ்டாலினுடன் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர்,  தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டனர்.
10 தொகுதிகள்: மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள  40 தொகுதிகளில் 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி தொகுதியும் அடங்கும்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:
இன்னும் சில கட்சிகளுடன்  கூட்டணி பேசி முடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். அப்பணிகள் முடிந்தபிறகு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இதற்காக அமைக்கப்பட்டுள்ள இரு கட்சிக் குழுவினரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வர்.
பிற கட்சிகளுடன் இன்று: திமுக கூட்டணியில் இடம்பெற உள்ள பிற கட்சிகளுடன் வியாழக்கிழமையில் இருந்து பேச்சுவார்த்தை தொடங்கும். 2 ஆண்டு காலமாக எங்களோடு தோழமையுடன் எல்லாப் பிரச்னைகளிலும் அரசை எதிர்த்து பொதுமக்களுக்காக போராடி வந்த கட்சிகளை அழைத்துப் பேச முடிவு செய்துள்ளோம்.
தேமுதிகவுடன் கூட்டணி இல்லை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்த பிறகு மீதமுள்ள இடங்களில் எல்லாம் திமுக போட்டியிடும் என்றார்.
21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவைக் காங்கிரஸ் ஆதரிக்குமா என்று கேட்கிறீர்கள்.  முதலில் இடைத் தேர்தலுக்கு தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன்பிறகு முடிவு செய்து அறிவிப்போம். 
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. அது முழுமையாக தயாரிக்கப்பட்ட பிறகு தெரிவிக்கப்படும். 
பண நல கூட்டணி: அதிமுக வேண்டுமானால் மக்கள் நலக் கூட்டணி என்று கூறிக் கொள்ளலாம். மக்கள் அதை பண நலக் கூட்டணி எனக் கூறுகின்றனர்.
பாமகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதா என்று கேட்கிறீர்கள்.  ஊகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
பின்னர்  காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுகவுடனான தொகுதிப் பங்கீடு முழு திருப்தி அளிப்பதாக கூறினார்.
2009-க்குப் பிறகு: திமுகவும் - காங்கிரஸும் இயற்கையான கூட்டணி என்று சொல்லுமளவு 2004,  2009 மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டு வெற்றி கூட்டணியாக இருந்தது.
ஆனால், 2014-இல் இரு கட்சிகளும் பிரிந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. திமுக, விசிக,  மமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. அதேபோல, காங்கிரஸ் தனித்து 39 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 2019 மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளது.
காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள்: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் கன்னியாகுமரி,  திருநெல்வேலி,  விருதுநகர்,  தேனி,  ராமநாதபுரம்,  சிவகங்கை,  சேலம்,  ஈரோடு, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் காங்கிரஸ் கேட்டு வருகிறது.
பிற கட்சி நிலவரம்: காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதம் 30 தொகுதிகள் உள்ளன. இதில் மதிமுக 3 தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளையும் கேட்டு வருகின்றன. ஆனால், திமுக சார்பில் தலா ஒரு தொகுதியே  ஒதுக்குவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வியாழக்கிழமை தொடங்கும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT