தமிழ்நாடு

டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள்: தடையை நீக்கியது  உயர்நீதிமன்றம்

DIN


டாஸ்மாக் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் எம்.செல்வம் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு இளங்கலைப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் பிற துறைகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பை கல்வி தகுதியாக நிர்ணயிக்கவில்லை. அரசு விதிமுறைகளுக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் கல்வித்தகுதியை நிர்ணயித்தது சட்ட விரோதமானது. டாஸ்மாக் கடைகளில் பட்டப்படிப்பை முடிக்காத பலர் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். எனவே இளநிலை உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் கோரிக்கை மனு அளித்தோம். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.  எனவே இளநிலை உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பை கல்வி தகுதியாக நிர்ணயிக்க டாஸ்மாக் நிறுவனத்தின் பொது மேலாளருக்கு உத்தரவிடவும், இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது. 
இந்த தடையை நீக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 500 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு, 10 ஆயிரத்து 404 பேர் விண்ணப்பித்துள்ளனர். உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட துறைகளில் இளநிலை உதவியாளர் பதவிக்கான கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ்மாக் நிறுவனத்தின் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கல்வித்தகுதி நிர்ணயம் செய்ததில் தவறு ஒன்றும் இல்லை. மனுதாரருக்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி இல்லை என்பதால் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். எனவே இந்த கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி, இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT