மக்களவைத் தேர்தல் : சென்னையில் 140 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: மாநிலம் முழுவதும் 19 டி.எஸ்.பி.க்கள் மாற்றம்

மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறையில் 140 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதைப்போல மாநிலம் முழுவதும் 19 டி.எஸ்.பி.க்கள்


மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறையில் 140 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதைப்போல மாநிலம் முழுவதும் 19 டி.எஸ்.பி.க்கள் (காவல் துணைக் கண்காணிப்பாளர்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக நடப்பது போன்ற காரணங்களால்  அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக காவல்துறையில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து 3 ஆண்டுகளாக ஒரே பணியிடத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பட்டியலை காவல்துறை உயர் அதிகாரிகள் தயார் செய்தனர். இதன் அடிப்படையில் முதல் கட்டமாக தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கடந்த 13 ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக 16 ஏ.டி.எஸ்.பி.களும், 87 டி.எஸ்.பி.களும் கடந்த 18 ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல சென்னை பெருநகர காவல்துறையில் 35 உதவி ஆணையர்களும், 81 காவல் ஆய்வாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
140 காவல் ஆய்வாளர்கள்:  இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், ஏற்கெனவே கடந்த 18 ஆம் தேதி,  காவல் ஆய்வாளர்கள்  81  பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட  உத்தரவை புதன்கிழமை ரத்து செய்தார். அதேவேளையில் 140 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இவர்களில், வேப்பேரி டி.வீரகுமார் கண்ணகிநகருக்கும், பட்டினப்பாக்கம் சிபுகுமார் மீனம்பாக்கத்துக்கும், எழும்பூர் கே.சேட்டு மத்தியக் குற்றப்பிரிவுக்கும், மயிலாப்பூர் கண்ணன், மத்தியக் குற்றப் பிரிவுக்கும், அண்ணா சாலை தங்கராஜ் நந்தம்பாக்கத்துக்கும், அண்ணாசதுக்கம் கே.பசுபதி சங்கர், நகர் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையில் மட்டும் 27 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல மாநிலம் முழுவதும் 19 டி.எஸ்.பி.க்
களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். டி.எஸ்.பி.களில்,  வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வி.எஸ்.ஜி.சுரேஷ், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவின் தலைமையிடத்துக்கும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிடப் பிரிவு எஸ்.கார்த்திகேயன், கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கும், நாமக்கல் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஏ.பழனிசாமி, பரமத்திவேலூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும், உடனடியாக புதிய பொறுப்புகளை ஏற்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் விளைவாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com