தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் மொழி தமிழ்: அமைச்சர் க.பாண்டியராஜன்

உலகில் தானாகவே விழுந்து எழுந்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் மொழி நம் தாய்மொழி தமிழ் என சென்னையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில்  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார். 


உலகில் தானாகவே விழுந்து எழுந்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் மொழி நம் தாய்மொழி தமிழ் என சென்னையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில்  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார். 
ஐக்கிய நாட்டின் கலை நிறுவன பண்பாட்டு நிறுவனத்தால் கடந்த 1999-ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டு,  அதற்கிணங்க உலகெங்கிலும் தாய்மொழி நாள் கொண்டாடப்படு கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியது:  பாகிஸ்தானில் 20 சதவீத மக்களால் பேசப்பட்டு வந்த உருது ஆட்சிமொழியாக்கப்பட்ட பொழுது 60 சதவீத மக்களால் பேசப்பட்டு வந்த வங்க மொழிக்கு எதிராக அந்த ஆணை இருந்ததால் மக்களிடையே கிளர்ச்சி ஏற்பட்டது.  இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.  இந்தச் செய்தியை அவர்கள் உலகறியச் செய்ததன் பயனாக உலகத் தாய்மொழி நாள் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. 
உலகமயமாக்கல்,  தொழில்நுட்பம் போன்றவற்றால் மொழிகள் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.  மொழி அழிந்தால் பண்பாடு அழியும். எனவே எதிர்காலத் தலைமுறையினர் தாய்மொழியை வளர்த்தெடுக்க வேண்டும். 
உலகில் தானாகவே விழுந்து எழுந்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் மொழி நம் தாய்மொழி தமிழாகும். சீனா, பிரான்ஸ்,  சிங்கப்பூர் போன்ற உலக நாடுகளில் தமிழுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  தமிழ் வளர் மையங்கள்,  தமிழ் பண்பாட்டு மையங்கள், சொற்குவைத் திட்டம் ஆகியவற்றின் மூலமாக தமிழை மேலும் வளப்படுத்த வேண்டும்.  அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.  முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார். 
சிறப்புக் கவியரங்கம்- கருத்தரங்கம்:  விழாவையொட்டி மாண்புகள் நீயே தலைப்பில் பாரதி சுகுமாறன் தலைமையிலான கவியரங்கம்,  தமிழ்...மொழியல்ல,  அடையாளம் தலைப்பில்  முனைவர் பால ரமணி தலைமையிலான கருத்தரங்கம்,  ஜனனி குழுவினரின் எங்கும் தமிழிசை தலைப்பில் தமிழிசைப் பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இதில் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் இரா.வெங்கடேசன்,  முனைவர் கா.மு.சேகர், முனைவர் க.பசும்பொன், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ந.அருள்,  பேராசிரியர்கள் ஒப்பிலா மதிவாணன்,  ஆ.மணவழகன்,  கு.சிதம்பரம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com