தமிழ்மொழி, இலக்கியங்களின் சிறப்பும் பெருமையும் வியக்க வைக்கின்றன: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 பழமை வாய்ந்த தமிழ்மொழி,  இலக்கியங்களின் சிறப்பும் பெருமையும் வியக்க வைப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
 விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய வேந்தர் ஜி.விசுவநாதன். 
 விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய வேந்தர் ஜி.விசுவநாதன். 


 பழமை வாய்ந்த தமிழ்மொழி,  இலக்கியங்களின் சிறப்பும் பெருமையும் வியக்க வைப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
மேலக்கோட்டையூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச தாய் மொழி தினம் மற்றும் இந்திய கலாசார திருவிழாவைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது : 
ஒருவரது மனதைக் கவரவேண்டுமென்றால் அவரது தாய்மொழியில் பேசவேண்டும் என்ற நெல்சன் மண்டேலாவின் கருத்தை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.   தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்களின் சிறப்பு,பெருமை குறித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த செம்மொழிச் சிறப்பைப் பெற்றுள்ள தமிழ் மொழி திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம்  போன்ற தமிழ் இலக்கியங்களை அணிகலன்களாகப் பெற்றுத் திகழ்கின்றது.
தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், புலவர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் பங்களிப்பு வியக்கவைக்கின்றது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், தமிழ் புலவர்களை ஆதரித்து, ஊக்குவித்த பணிகளும், திருக்கோயில்கள் பலவற்றைக் கட்டி அவற்றில் தமிழை இடம் பெறச் செய்த  அரும் பணிகளும் தமிழ் மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியம், கலாசாரம் அழியா நிலையைப் பெற்று நிலைத்து, இன்றைய உயர்ந்த நிலை அடைய முக்கிய காரணம் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்: இந்தியா  வேறுபட்டபல கலாசாரங்களைக் கொண்டிருந்தாலும், மேன்மையான பாரம்பரியங்களைக் கொண்ட மொழியியல் நம்மை ஒன்றிணைக்கின்றது. 
இந்தியாவில் தற்போது 22 மொழிகள் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போஜ்பூரி உள்ளிட்ட 38 மொழிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக பயன்படுத்த மத்தியஅரசின் அனுமதிக்குக் காத்திருக்கும் நிலையில் உள்ளன.
கடந்த 1968 -ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசின் மும்மொழிக் கொள்கை இன்று வரை முழுமையாக அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 
தரமான உயர்கல்வி பெற்று உலகின் பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறும் இன்றைய இந்திய மாணவர்கள்,கூடுதலாக ஓரிரு மொழிகளை அறிந்து கொள்வது அவசியம் என்றார்.  
கல்வியாளர் வ.வே. சுப்பிரமணியன், தேசிய சிந்தனைக்கழக மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி, வி.ஐ.டி துணைத் தலைவர் வி.செல்வம்,  துணைவேந்தர் என்.சம்பந்தம், தேசியசிந்தனைக்கழக மாநில அமைப்பாளர் மா.கொ.சி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com