திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதில்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அரசியல் பேசவில்லை என்றும், மனிதாபிமான உணர்வுடன் சந்தித்ததாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதில்!


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அரசியல் பேசவில்லை என்றும், மனிதாபிமான உணர்வுடன் சந்தித்ததாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லும் அளவுக்கு, இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு வந்து, அவரை நேரில் சந்தித்துப் பேசினார்.

ஒரு சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது, விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, விஜயகாந்துடன் அரசியல் பேச வரவில்லை. மனிதாபிமான அடிப்படையிலேயே அவரை சந்திக்க வந்தேன். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிவந்திருக்கும் விஜயகாந்ததை சந்தித்துப் பேசினேன். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது விஜயகாந்த் அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தார். கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு அமெரிக்காவில் இருந்த விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார். தொலைபேசி வாயிலாக என்னிடம் பேசியது இன்னும் மனதில் நிழலாடுகிறது.

ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் மரியாதையோடு என்னை அண்ணன் அண்ணன் என்றே விஜயகாந்த் அழைப்பார் என்று ஸ்டாலின் நெகிழ்ச்சியோடுக் கூறினார்.

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி, உங்கள் நல்லெண்ணத்துக்கு பாராட்டு, நன்றி என்று மிக மழுப்பலாக ஸ்டாலின் பதில்  அளித்தார்.

அதிமுக - பாஜக - தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருக்கும் நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை சந்தித்துப் பேசியிருந்தார். 

அதிமுக கூட்டணியில் இணைய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், 4 மற்றும் அதற்கும் குறைவான தொகுதிகளை ஒதுக்க அதிமுகவும், பாமகவுக்கு நிகரான தொகுதிகளை தேமுதிகவும் கேட்டு வருவதே இழுபறிக்குக் காரணங்களாக அமைந்திருந்தன.

இந்த நிலையில், திமுக பக்கம் தேமுதிகவை இழுக்கவும் சில முயற்சிகள் நடந்து வந்தது. அதன் ஒருபடியாகவே இன்று விஜயகாந்த்தை ஸ்டாலின் சந்தித்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த 2016 சட்டப்பேரவைத்  தேர்தலின் போது தேமுதிக, திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. இதுவும் தனது வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணங்களில் ஒன்று என்று திமுக தலைவர்களின் மனதில் எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்தது. இதுவே இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்துடனான ஸ்டாலின் சந்திப்புக்குக் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com