திருவள்ளூர் அருகே களைகட்டிய சேவல் போட்டி: 1,000 சேவல்கள் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட சேவல் போட்டியில் இலங்கை, ஆந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000 சேவல்கள் பங்கேற்றதால் போட்டி களைகட்டியது. 
திருவள்ளூரை  அடுத்த  தங்கனூரில்  நடைபெற்ற  சேவல்   போட்டி.
திருவள்ளூரை  அடுத்த  தங்கனூரில்  நடைபெற்ற  சேவல்   போட்டி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட சேவல் போட்டியில் இலங்கை, ஆந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000 சேவல்கள் பங்கேற்றதால் போட்டி களைகட்டியது. 
தமிழகத்தில் வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக கிடா முட்டு மற்றும் சேவல் விளையாட்டு ஆகியவை இருந்து வந்தன. இதுபோன்ற சிறப்பு பெற்ற சேவல் போட்டியில் சூதாட்டம், மோசடி போன்ற புகார்களால் தடை விதிக்கப்பட்டிருந்தன. 
எனினும், திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 அதைத் தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளின்படி பிரச்னையில்லாமல் நடத்திக் கொள்ள நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.
அதைத் தொடர்ந்து, நிகழாண்டில் திருவள்ளூர் பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சேவல் போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. திருவள்ளூர் அருகே தங்கனூர் கிராமத்தில் நண்பர்கள் நடத்தும் சேவல் கலைப் போட்டி சனிக்கிழமை நடத்தப்பட்டது. 
இப்போட்டியை அதிமுக மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு தலைவர் தா.இளம்பருதி தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் மற்றும் இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் 1,000 சேவல்களுடன் சேவல் வளர்ப்போர் இப்போட்டி நடைபெறும் களத்தில் வாகனங்களில் வந்து குவிந்தனர். அதற்கு முன் சேவல் போட்டி நிர்வாகத்திடம் ரூ.900 செலுத்தி தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர். 
அதைத் தொடர்ந்து  வகை, எடை, வயது ஆகியவற்றைப் பொறுத்து சேவல்கள் மோதலுக்கு அனுமதிக்கப்பட்டன.
குறிப்பாக சேவலின் தலையில் இருக்கும் கொண்டையை அடையாளம் வைத்து குருவிப்பூ சேவல், மத்தாப்பு சேவல், தவளைப்பூ சேவல், கத்தரிப்பூ சேவல், ஊசிப்பூ சேவல் மற்றும் வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பசுப்புக்கால், பூதக்கால், முகைக்கால், கருங்கால் ஆகிய வகைகள் பிரிக்கப்பட்டு விடப்பட்டன. 
இப்போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு ஒரு மணி நேரத்தில் முதல் 20 நிமிடங்கள் களத்தில் இறக்கி மோதவிடுகின்றனர். 
அதைத் தொடர்ந்து 20 நிமிடங்கள் தண்ணீர் கொடுத்து சுடுநீரால் உடலை நீவிவிட்டு ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறக்கி மோதவிடுகின்றனர்.
சேவல்கள் ஒன்றுக்கொன்று சிலுப்பிக் கொண்டு பறந்து, பறந்து கால் ஊசி நகத்தாலும், அலகாலும் தாக்கிக் கொண்டன. 
அதைத் தொடர்ந்து அவை மோதிக்கொண்டபோது குறிப்பிட்ட வட்டத்தை தாண்டித் வெளியில் சென்றாலோ, தலைகவிழ்ந்து மண்ணைத் தொட்டாலோ அல்லது திரும்பிச் சென்றாலோ அந்த சேவல் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 
இப்போட்டியின்போது சில சேவல்களுக்கு ரத்தம் சிந்தினாலும் தொடர்ந்து களத்தில் நின்று போராடி வீரத்தை வெளிப்படுத்தின. 
இப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற சேவல்களுக்கு வெற்றிக் கோப்பையும், சுழற்கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. 
 சேவல் போட்டியைப் பார்வையிடுவதற்காக திருவள்ளூர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com